நாட்டில் ஒரு லட்சம் பேருக்கு ஒரு நீதிபதி: உயர்நீதிமன்ற நீதிபதி டி. மதிவாணன் பேச்சு
By திருவாரூர் | Published on : 21st March 2016 06:42 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
நாட்டில் ஒரு லட்சம் பேருக்கு ஒரு நீதிபதி இருக்கும் நிலைதான் உள்ளது என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி டி. மதிவாணன் தெரிவித்தார்.
திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் ரூ. 4.07 கோடியில் மாவட்ட உரிமையியல், குற்றவியல் நடுவர் நீதிமன்ற புதியக் கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவில் அவர் மேலும் பேசியது:
நாட்டில் மக்கள்தொகை பெருக்கத்துக்கேற்ப நீதிமன்றங்களில் வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதே அளவில் தேங்கியுள்ள வழக்குகளுக்குத் தீர்வு காண போதிய நீதிபதிகள் இல்லையென்பதால் நீதிபதி காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். அமெரிக்காவில் ஒரு லட்சம் பேருக்கு 13 நீதிபதிகள் உள்ளனர். இந்தியாவில் ஒரு லட்சம் பேருக்கு ஒரு நீதிபதி இருக்கும் நிலை உள்ளது.
சேலம், கிருஷ்ணகிரி நீதிமன்றங்களின் வயது 200 ஆண்டுகளைக் கடந்தது. இன்றும் பழமை மாறாமல் மரபுச்சின்னமாக பாதுகாக்கப்படுவதுபோல், நன்னிலத்தில் அமையும் நீதிமன்றத்தை மரபுச் சின்னம்போல் பாதுகாத்துப் பராமரிக்க வேண்டும். இல்லாதவர்களுக்கும், அறியாதவர்களுக்கும் சட்ட உதவி அளிப்பது அரசின் கடமை. அதைக் கேட்டு பயன்பெறுவது மக்களின் கடமை. இளம் வழக்குரைஞர்கள் மூத்த வழக்குரைஞர்களிடம் சிறந்த முறையில் அணுகி வழக்காடும் திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றார் மதிவாணன். சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியும், திருவாரூர் மாவட்ட நீதிமன்றங்களுக்கான பொறுப்பு நீதிபதியுமான ஆர். மகாதேவன் பேசியது:
நீதிமன்றத்தை நாடும் மக்களுக்கு உடனடியாக தீர்வு கிடைக்க வேண்டும். குறிப்பிடத்தக்க காலத்தில் வழங்கப்படக் கூடிய நீதிதான் உயர்ந்தது. காலதாமத நீதி, நீதியை மறுப்பது மட்டுமல்லாமல் நீதியை மறப்பதாகும். மாவட்ட நீதிமன்றம் தான் நீதிபரிபாலனத்தின் அடிப்படையை தொடங்கி வைக்கிறது. இந்த இடத்தில் தான் பல்வேறு விதமான நீதி அடிப்படை சிக்கல்களும் உருவாகிறது. உயர்நீதிமன்றத்தில் அவை அடைவது மட்டும் அல்லாமல் உச்சநீதிமன்றம் வரை சென்று நீதியின் தன்மை அங்கு நிலை நாட்டப்படுகிறது.
இந்த விஷயங்களையெல்லாம் சீர்தூக்கிப் பார்ப்போமேயானால் நீதியை வழங்குவதற்கான அடிப்படைத் தேவைகள் ஆங்காங்கே செலுமையாக வந்து சேர வேண்டும். அந்த விதத்தின் அடிப்படையில் நன்னிலம் பகுதி மக்கள் சார்ந்த விஷயமாக நீதிமன்றம் கட்டப்படுகிறது.
12 மாதங்களில் நீதிமன்ற வளாகம் கட்டி முடிக்க தேவையான அத்தனை முயற்சிகளையும் நீதிதுறை மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கட்டடம் கட்டி முடித்தவுடன், கட்டடத்தை பராமரிப்பது, மேன்மையடையச் செய்வது, உள் கட்டமைப்பு வசதியை மேம்படுத்துவது நீதிமன்றங்களின் அங்கமாக உள்ள வழக்குரைஞர்களின் கடமை. வழக்குரைஞர்கள் இல்லையெனில் நீதியென்ற கருவி இயங்காது. எனவே நீதியை நிலை நாட்ட நீதியரசர்களுக்கும், நீதிபதிகளுக்கும் முழு ஒத்துழைப்பை வழக்குரைஞர்கள் வழங்க வேண்டும் என்றார் மகாதேவன்.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சி.டி. செல்வம் பேசியது: நீதியை நிலைநாட்டும் வழக்குரைஞர்களிடமும் சில குறைகள் உள்ளது. அதை சரிசெய்து கொள்ள வேண்டும் என்றார்.
விழாவில், திருவாரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி வி. சிவஞானம், தலைமை குற்றவியல் நீதிபதி எல்.எஸ். சத்தியமூர்த்தி, நன்னிலம் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி பி. சுதா, நன்னிலம் வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் டி. ராதாகிருஷ்ணன், செயலர் டி. தெய்வீகன், மூத்த வழக்குரைஞர் ஜே. கணேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.