சுடச்சுட

    

    கட்டாயக் கல்விச் சட்டத்தில் மாணவர் சேர்க்கைக்கு மறுத்த தனியார் பள்ளி இழப்பீடு வழங்க உத்தரவு

    By திருவாரூர்,  |   Published on : 25th March 2016 12:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கட்டாயக் கல்விச் சட்டத்தின்கீழ் மாணவர் சேர்க்கைக்கு மறுத்த தனியார் மெட்ரிக் பள்ளி, பாதிக்கப்பட்ட மாணவருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று திருவாரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

    திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே உள்ள குரும்பல் கிராமத்தைச் சேர்ந்தவர் பொன். ரமேஷ் மகன் முத்துக்குமார். இவர் 2010-ஆம் ஆண்டு திருத்துறைப்பூண்டியில் உள்ள ஒரு தனியார் மெட்ரிக் பள்ளியில் இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் எல்கேஜியில் சேர்க்கப்பட்டார்.

    இந்நிலையில், மாணவர் முத்துக்குமார் கல்விக் கட்டணம் சரிவர செலுத்தாமல் பாக்கி வைத்ததாகக் கூறி, பள்ளி நிர்வாகம் முத்துக்குமாரை பள்ளியிலிருந்து நீக்கியதாகக் கூறப்படுகிறது. இதனால், வேறு பள்ளியில் முத்துக்குமார் சேர்க்கப்பட்டு, படிப்பைத் தொடர்ந்தார்.

    இதற்கிடையில், முத்துக்குமாரின் தந்தை பொன்.ரமேஷ் கட்டாயக் கல்விச் சட்டத்தின் கீழ் கல்வி வழங்க மறுத்த தனியார் மெட்ரிக் பள்ளியை எதிர்த்து திருவாரூர் மாவட்ட நுகர்வோர் குறை தீர்க்கும் மன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். வழக்கை விசாரித்த மாவட்ட நுகர்வோர் குறை தீர்க்கும் மன்றத் தலைவர் ஜெயச்சந்திரன், மாணவர் முத்துக்குமாரை வரும் கல்வியாண்டில் 4-ஆம் வகுப்பில் சேர்க்க வேண்டும், அவருடைய சகோதரி பாவனாஸ்ரீயை 2-ஆம் வகுப்பில் இதே சட்டப்படி சேர்க்க வேண்டும். மேலும், வறுமைக் கோட்டுக்குக்கீழ் வாழும் மாணவர்களுக்கு 25 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டுமென்ற கட்டாயக் கல்விச் சட்டத்தை மீறியதற்காக முத்துக்குமாருக்காக செலுத்திய தொகை ரூ.16,710-ஐ 12 சதவீத வட்டியுடன் திருப்பித் தர வேண்டும், இப்பிரச்னையால் பொன்.ரமேஷுக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்காக அவருக்கு ரூ.1 லட்சமும், வீண் செலவு ஏற்படுத்தியதுக்காக ரூ.1 லட்சமும் என மொத்தம் ரூ. 2 லட்சம் வழங்க வேண்டும் என திருத்துறைப்பூண்டி தனியார் மெட்ரிக் பள்ளி நிர்வாகத்துக்கு உத்தரவிட்டார்.

    இந்த வழக்கில் சரியான நடைமுறையை மேற்கொள்ளாத காரணத்தால் அப்போதைய திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சி.நடராசன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ரெ.நிர்மலா, பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் சபீதா, மெட்ரிக் பள்ளிகளின் இயக்குநர் பிச்சை ஆகியோருக்கு தலா ரூ.10,000 வீதம் ரூ. 40,000 நுகர்வோர் சட்ட உதவி கணக்கில் இழப்பீடாகச் செலுத்த வேண்டும் எனவும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai