சுடச்சுட

  

  கிழக்கு கடற்கரைச் சாலையில் ரவுண்டானா அமைக்கப்படுமா?

  By திருத்துறைப்பூண்டி  |   Published on : 28th March 2016 08:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சென்னையிலிருந்து கன்னியாகுமரி செல்லும் கிழக்கு கடற்கரைச் சாலையில், திருத்துறைப்பூண்டி- முத்துப்பேட்டை பிரிவுச் சாலைகளில் அடிக்கடி நிகழும் விபத்துகளை தடுக்க அங்கு ரவுண்டானாக்கள் அமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  சென்னையிலிருந்து மாமல்லபுரம், மரக்காணம், புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், பொறையாறு, காரைக்கால், நாகை, வேளாங்கண்ணி, திருத்துறைப்பூண்டி, அதிராம்பட்டினம், ராமநாதபுரம், சாயல்குடி, தூத்துக்குடி வழியாக கன்னியாகுமரிக்கு கிழக்கு கடற்கரைச் சாலை இருவழிச் சாலையாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலையை ரூ.10,000 கோடி மதிப்பீட்டில் நான்குவழிச் சாலையாக மாற்றம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

  சென்னையிலிருந்து விழுப்புரம், திருச்சி, மதுரை, திருநெல்வேலி வழியாக கன்னியாகுமரிக்கு செல்வதைவிட கிழக்குகடற்கரைச் சாலை வழியாக சென்றால் 120 கிலோ மீட்டர் தொலைவு குறைவு என்பதுடன், போக்குவரத்து நெரிசலும் இல்லாததால் பெரும்பாலானோர் இந்தச் சாலையில் பயணிக்கின்றனர்.

  காரைக்கால் துறைமுகத்திலிருந்து தூத்துக்குடி துறைமுகத்துக்கு இந்த சாலை வழியாகத் தினந்தோறும் நூற்றுக்கணக்கான கன்டெய்னர் லாரிகள் இயக்கப்படுகின்றன. இதனால், இந்த சாலையில் விபத்துகள் நிகழ்வது தொடர்கதையாகி வருகிறது.

  குறிப்பாக, கிழக்கு கடற்கரைச் சாலையிலிருந்து திருத்துறைப்பூண்டி நகருக்குள் செல்லும் பிரிவுச் சாலை, வேதாரண்யம், நாகப்பட்டினம், தூத்துக்குடி செல்லும் சாலைகள் பிரியுமிடத்திலும், நெடும்பலம் கிராமத்தில் சாலை பிரியுமிடத்திலும், முத்துப்பேட்டையில் ஆலங்காடு, மங்கலூர் பகுதியில் பிரியும் புறவழிச் சாலைகளிலும் ரவுண்டானாக்கள் அமைக்கப்படாததால் அப்பகுதிகளில் விபத்துகள் அடிக்கடி நிகழ்கின்றன. எனவே, இந்தப் பகுதிகளில் ரவுண்டானாக்கள் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai