Enable Javscript for better performance
காவிரிப் பிரச்னையில் அனைத்துக் கட்சிகளும் ஒருங்கிணைந்து போராட வேண்டும்: வைகோ- Dinamani

சுடச்சுட

    

    காவிரிப் பிரச்னையில் அனைத்துக் கட்சிகளும் ஒருங்கிணைந்து போராட வேண்டும்: வைகோ

    By DIN  |   Published on : 08th October 2016 12:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காவிரிப் பிரச்னையில் அனைத்துக் கட்சிகளும் ஒருங்கிணைந்துப் போராட வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலர் வைகோ கூறினார்.
    காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மறுக்கும் மத்திய அரசை கண்டித்து மக்கள் நலக் கூட்டணி சார்பில் திருவாரூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அவர் பேசியதாவது:
    காவிரி நீர் பிரச்னையில் மேலாண்மை வாரியம் அமைக்க மறுக்கும் மோடி தலைமையிலான மத்திய அரசு தமிழகத்தை வஞ்சித்துள்ளது. உச்ச நீதிமன்றம் தண்ணீர் வழங்க 3 தீர்ப்புகள் வழங்கியும், அதை கர்நாடக அரசு ஏற்கவில்லை.
    கர்நாடக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டி சொட்டு தண்ணீர்கூட தமிழகத்துக்கு தர இயலாது எனவும், அந்தக் கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் 3 பேர் பங்கு கொண்டதாக உச்ச நீதிமன்றத்துக்கு கொடுத்த கடிதத்தில் கூறியுள்ளது. உச்ச நீதிமன்றத்துக்கு எதிராக கர்நாடக அரசு நடத்திய கூட்டத்தில் பங்கேற்ற 3 மத்திய அமைச்சர்களைப் பணிநீக்கம் செய்ய மத்திய அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?
    இந்திய ஒருமைப்பாட்டுக்கு எதிராக மோடி தலைமையிலான மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. காவிரி நீர் பிரச்னையில் அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து போராட வேண்டும். அக்டோபர் 17, 18 ஆகிய தேதிகளில் தொடர் ரயில் மறியல் போராட்டம் நடைபெறுகிறது. இதில் அரசியல் கட்சிகள் மட்டுமல்ல. அனைத்து பொதுமக்களும் பங்கேற்க வேண்டுமென்றார் வைகோ.
    இதைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: காவிரி பிரச்னைக்காக அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலக வேண்டுமென்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறுவது அவரது கருத்து.
    மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் முதல்வர் ஜெயலலிதாவை காங்கிரஸ் கட்சி துணைத் தலைவர் ராகுல் காந்தி பார்க்க வந்திருப்பது மனிதாபிமானமே. முதல்வர் ஜெயலலிதா விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டுமென்று இறைவனை வேண்டிக்கொள்வோம் என்றார் வைகோ.
    இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநிலச் செயலர் இரா.முத்தரசன் பேசியதாவது: காவிரி நீர் பிரச்னையில் மத்தியில் காங்கிரஸ், பாஜக, யார் ஆட்சி செய்தாலும் தொடர்ந்து தமிழகத்துக்கு துரோகம் செய்து வருகிறது. வேளாண்மைத் துறை மழை பெய்யும் என்கிற நம்பிக்கையில் நேரடி விதைப்பை வேண்டுகோள் விடுத்தது. இதை ஏற்று விவசாயிகள் நேரடி நெல் விதைப்பில் ஈடுபட்டனர். ஆனால் மழை பெய்யவில்லை. தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசை கண்டித்து தொடர்ந்து போராட்டம் நடைபெறும் என்றார் முத்தரசன்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai