Enable Javscript for better performance
கடைமடை பகுதி பாசனத்துக்கு தண்ணீர் கோரி 13 இடங்களில் சாலை மறியல்- Dinamani

சுடச்சுட

    

    கடைமடை பகுதி பாசனத்துக்கு தண்ணீர் கோரி 13 இடங்களில் சாலை மறியல்

    By DIN  |   Published on : 15th October 2016 07:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கடைமடை பகுதி பாசனத்துக்கு தண்ணீர் வழங்கக் கோரி, திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி,  முத்துப்பேட்டை பகுதிகளில் 13 இடங்களில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பிலான விவசாயிகள் சங்கத்தினர் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    கடந்த மாதம் 20 ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டும் இதுவரை கடைமடை பகுதிகளான திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, எடையூர்சங்கேந்தி, தொண்டியக்காடு உள்ளிட்ட கடைமடை பகுதிகளுக்கு  தண்ணீர் சென்றடையவில்லை. ஆறுகள் வறண்டு கிடக்கும் அபாய சூழ்நிலை நிலவுகிறது.
    மேட்டூர் அணை நீரையும், பருவ மழையையும் நம்பி நேரடி விதைப்பு செய்யப்பட்ட சம்பா பயிர்கள் முளைக்காத நிலையில், மறுசாகுபடி செய்ய வேண்டிய நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். வரும் சொற்ப அளவு நீரையும் பொதுப்பணித்துறையினர் சரிவர பகிர்ந்தளிக்காததால், கடைமடை பகுதி விவசாயமே கேள்விக்குறியாகிவிட்டது.
    இதைக் கண்டித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பிலான விவசாயிகள் சங்கத்தினர் 13 இடங்களில் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்துக்கு அக்கட்சியின் வட்டாரச் செயலர் அ. பாஸ்கர் தலைமை வகித்தார். நகரச் செயலர் முருகேசன், விவசாயிகள் சங்க நகர நிர்வாகிகள் வாசுதேவன், எள். பக்கிரிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் கே. உலகநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதேபோல், திருப்பத்தூரில் டி. கருணாநிதி, ராயநல்லூரில் கே.ஆர். ஜோசப், விளக்குடியில் எம். சிவஞானம், கொத்தமங்கலத்தில் சி. உலகநாதன், மடப்புரத்தில் டி. செல்வராஜன், நெடும்பலத்தில் கே. விஜயா, கட்டிமேட்டில் ரெத்தினசாமி, பிச்சன்கோட்டகத்தில் எம். மகாலிங்கம், பாமணியில் கே. மூர்த்தி, மணலியில் கே. பாலு, பழயங்குடியில் கோ. ஜெயபால், கச்சனத்தில் வி. குமரசாமி ஆகியோர் தலைமையிலும் சாலை மறியல் நடைபெற்றது.
    திருத்துறைப்பூண்டியில் நடைபெற்ற சாலை மறியலால் சுமார் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையறிந்த வட்டாட்சியர் கோ. உதயகுமார் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் அங்கு சென்று, போராட்டக் குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து மறியல் விலக்கிக்கொள்ளப்பட்டது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai