Enable Javscript for better performance
"பருவமழைக்கு முன்னதாக மாவட்டத்தில் 2.05 லட்சம் மரக்கன்றுகள் நடப்படும்'- Dinamani

சுடச்சுட

    

    "பருவமழைக்கு முன்னதாக மாவட்டத்தில் 2.05 லட்சம் மரக்கன்றுகள் நடப்படும்'

    By DIN  |   Published on : 15th October 2016 07:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவாரூர் மாவட்டத்தில் பருவமழைக் காலம் தொடங்குவதற்கு முன்பு புதிய தொழில்நுட்பத்தில் மரக்கன்றுகள் வளர்க்கும் முறையில் 2.05 லட்சம் மரக்கன்றுகள் நடப்படும் என ஆட்சியர் இல. நிர்மல்ராஜ் கூறினார்.
    திருவாரூர் அருகேயுள்ள கூடூர் ஊராட்சி களக்குடி கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் புதிய தொழில்துட்ப முறையில் தேக்கு, நாவல், வேம்பு மற்றும் மகிழம் வகையிலான 200 மரக்கன்றுகள் நடவு செய்யும் பணியை வியாழக்கிழமை தொடங்கிவைத்து அவர் மேலும் பேசியது:
    புதிய தொழில்நுட்ப முறையில் மரக்கன்றுகள் நடப்படும் இடத்தில் ஈரப்பதம் இருக்கும். மரக்கன்று வளர்வதற்குத் தேவையான சத்துக்கள் கிடைக்கும். மரக்கன்று நடப்படும் குழியில் நான்கு பக்கமும் பிரத்தியேகமாக இதற்கென தயார் செய்யப்பட்ட 2 அங்குலம் விட்டம் கொண்ட பிளாஸ்டிக் பைப்புகள் நடப்பட்டு, பைப்பினுள் ஒரு அடி உயரத்துக்கு தொழு உரமும், ஒரு அடி உயரத்துக்கு மணலும் நிரப்பப்பட்டபின் குழியின் மத்தியில் மரக்கன்றை நடவு செய்து குழியை மண் கொண்டு நிரப்பிட வேண்டும்.
    நடப்பட்ட மரக்கன்றுக்கு தண்ணீர் ஊற்றும்போது ஈரப்பதம் நீண்ட நாள்களுக்கு தக்கவைத்துக் கொள்ளவும், மரக்கன்று நன்றாக வளர்வதற்குத் தேவையான உரச்சத்தும் கிடைப்பதற்கு புதிய தொழில்நுட்ப முறை ஏதுவாக இருக்கும்.
    நிகழாண்டில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 10 ஊராட்சி ஒன்றியங்களிலும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் பெருமளவில் மரக்கன்றுகள் நடும் பணிக்காக 2 லட்சத்து 5 ஆயிரத்து 970 மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.
    மேலும், இதற்கென கண்டறியப்பட்டுள்ள பல்வேறு பகுதிகளில் பருவமழை காலத்துக்கு முன்னதாக மரக்கன்றுகள் நடும் பணிகள் நடைபெற்று வருகிறது என்றார் நிர்மல்ராஜ்.
    நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் அ. தியாகராஜன், செயற்பொறியாளர் (ஊரக வளர்ச்சி) செல்வராஜ், உதவி செயற்பொறியாளர் கே.  பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai