குளங்கள் தூர்வாரும் பணி: ஆட்சியர் ஆய்வு

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை பகுதிகளில் குளங்களை தூர்வாரி, வண்டல் மண்ணை விளை நிலங்களுக்கு எடுத்துச் செல்லும் பணியை மாவட்ட ஆட்சியர்
Updated on
1 min read

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை பகுதிகளில் குளங்களை தூர்வாரி, வண்டல் மண்ணை விளை நிலங்களுக்கு எடுத்துச் செல்லும் பணியை மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
திருத்துறைப்பூண்டி வட்டம், விளத்தூர் ஊராட்சிக்குள்பட்ட பாம்புபுகுந்தநல்லூர் கிராமத்தில் அய்யனார்குளம் தூர்வாரப்பட்டு, வேளாண் பணிகளுக்காக வண்டல் மண்ணை அள்ளிச் செல்லும் பணியைப் பார்வையிட்டு, அலுவலர்களிடம் விவரம் கேட்டறிந்தார்.
தொடர்ந்து, பின்னத்தூர் கிராமம் இராமநாத குளம், செருபண்ணையூர் கிராமம் பெருமாண்டி குளம் ஆகியவற்றில் நடைபெறும் தூர்வாரும் பணியை ஆய்வு செய்தார்.
இதையடுத்து, முத்துப்பேட்டை ஒன்றியத்துக்குள்பட்ட உப்பூர் ஊராட்சி கோபாலசமுத்திரம் கிராமத்தில் உள்ள சத்திரகுளம், தாமரைக்குளம், தெற்குகாடு கிராமம் பெரிய ஏரி, வடகாடு கோவிலூர் நெல்லிக் குளம் ஆகியவற்றில் வண்டல் மண் அள்ளப்படும் பணியைப் பார்வையிட்டு, அதன் பயன்கள் குறித்து விவசாயிகளிடம் கேட்டறிந்தார்.
பின்னர், மாவட்ட ஆட்சியர் கூறியது:
விளை நிலங்களை மேம்படுத்தும் பொருட்டு, குளங்கள் மற்றும் ஏரிகளில் உள்ள வண்டல் மண்ணை எடுத்துச் செல்ல அனைத்து விவசாயிகளும் முன்வர வேண்டும். இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்துவதன் மூலமாக குளங்கள் மற்றும் ஏரிகளில் அதிக மழை நீரை சேமிக்க முடியும்.
மானாவாரி விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு 90 கன மீட்டர் என்ற அளவிலும், நஞ்சை நிலங்களுக்கு ஏக்கருக்கு 75 கன மீட்டர் அளவிலும் வண்டல் மண் இலவசமாக வழங்கப்படுகிறது
என்றார்.
இந்த ஆய்வில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் தியாகராஜன், வேளாண் இணை இயக்குநர் க. மயில்வாகனன், வருவாய்க் கோட்டாட்சியர் செல்வசுரபி, துணை இயக்குநர் (வேளாண்மை) கணேசன், வட்டாட்சியர் கோ. உதயகுமார் (திருத்துறைப்பூண்டி) உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com