திருவாரூர் மாவட்டத்துக்கு ரூ. 19 கோடி மதிப்பில் குறுவைத் தொகுப்புத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது என மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ்
தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி டெல்டா மாவட்டங்களில் குறுவை நெல் சாகுபடியுடன் நெல்பயிருக்கு மாற்றாகப் பயறுவகைப் பயிர்கள் சாகுபடி மேற்கொள்ளவும், மண் வளத்தை அதிகரிக்கவும் ரூ. 56.92 கோடி நிதி ஒதுக்கீட்டில் குறுவை தொகுப்பு திட்டத்தை அறிவித்துள்ளார்.
இந்த நிதியுதவியைப் பயன்படுத்தி, திருவாரூர் மாவட்டத்தில் நிகழாண்டு குறுவை பருவத்தில் 37,850 ஏக்கரில் நெல்லும், 39,200 ஏக்கரில் உளுந்தும் பயிரிட திட்டமிடப்பட்டுள்ளது. குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டத்தின் கீழ் 12 மணி நேர மும்முனை மின்சாரம் வழங்கப்படும். மாவட்டத்தில் 28,000 ஏக்கர் பரப்பில் இயந்திர நடவுப் பணி மேற்கொள்ள இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, அதற்கென ரூ. 11.2 கோடி நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது.
நெல் நுண்ணூட்டச்சத்து 8,800 ஏக்கர் பரப்புக்கும், சிங் சல்பேட் 28,000 ஏக்கர் பரப்புக்கும், உயர்உரங்கள் 28,000 ஏக்கர் பரப்புக்கும் செயல்படுத்த ரூ. 1 கோடி நிதி ஒதுக்கீடுபெறப்பட்டுள்ளது. மேலும், உழவுப் பணி மேற்கொள்ள 16,000 ஏக்கர் பரப்புக்கு ரூ. 0.80 கோடி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது.
30 எண்கள் கொண்ட 350 அலகு பி.வி.சி குழாய்கள் விலையில்லாமல் வழங்க ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. இதற்கென ரூ.0.735 கோடி நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. மாவட்டத்தின் வெண்ணாறு பகுதியில் 8,750 ஏக்கர் பரப்பில் பசுந்தாளுரப் பயிர் விதைகள் வழங்கிட ரூ.1.05 கோடி நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது.
பயறு வகை சாகுபடிக்கான உளுந்து விதைகள் 25,000 ஏக்கருக்கு வழங்க ரூ.2.4 கோடி, பயறு வகை பயிருக்களுக்கான உயிர் உரங்கள் 25,000 ஏக்கருக்கும், டிஏபி உரம் 25,000 ஏக்கருக்கும் வழங்க ரூ.1.60 கோடி நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது.
திட்டம் குறித்த விளம்பரப் பணிகள் மேற்கொள்ளவும் நிதிஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. நிகழாண்டு குறுவைத் தொகுப்பு திட்டத்தின் கீழ் மேற்கண்ட பல்வேறு இனங்களில் செயல்படுத்த ரூ.19 கோடி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.