பள்ளி வாகனங்களை இயக்கும்போது ஓட்டுநர்கள் செல்லிடப்பேசி பேசுவதைத் தவிர்க்க வேண்டும் என திருவாரூர் மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ் தெரிவித்தார்.
திருவாரூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு உள்பட்ட பள்ளி வாகனங்களை ஆட்சியர் நிர்மல்ராஜ் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
திருவாரூர் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற ஆய்வில் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பள்ளி வாகனங்களில் அவசர கால வெளியேறும் வசதி, குழந்தைகள் எளிதாக ஏற தாழ்வான படிக்கட்டுகள், பள்ளி வாகனம் என்ற அறிவிப்பு, வேகக் கட்டுப்பாட்டுக் கருவி, முதலுதவி பெட்டி, தீயணைப்பு கருவி வைக்கப்பட்டுள்ளனவா, ரிப்ளக்டர் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளதா என்பன குறித்தும் அவர் ஆய்வு செய்தார்.
ஆய்வுக்குப் பின்னர் ஆட்சியர் கூறியது: பள்ளி வாகனங்களில் ஏதேனும் தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்பட்டால் அதை உடனடியாக பள்ளி நிர்வாகத்தின் கவனத்துக்கு ஓட்டுநர்கள் எழுத்துப்பூர்வமாக தெரியப்படுத்த வேண்டும். பள்ளி வாகனம் ஒவ்வொன்றிலும் குழந்தைகளை வீட்டிலிருந்து பள்ளிக்கும், மீண்டும் வீட்டுக்கும் அழைத்துச் செல்லும்போது உதவியாளர் ஒருவர் கண்டிப்பாக இருக்க வேண்டும். வாகனங்களை இயக்கும்போது ஓட்டுநர்கள் செல்லிடப்பேசி பேசுவதைத் தவிர்த்து கவனமாக இயக்க வேண்டும் என்றார் நிர்மல்ராஜ். இதில் திருவாரூர், நன்னிலம், திருத்துறைப்பூண்டி, குடவாசல் வட்டங்களுக்கு உள்பட்ட 84 பள்ளி வாகனங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டன. 8 வாகனங்களின் தகுதிச்சான்று ரத்து செய்யப்பட்டு, வாகனங்களில் குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டு மீண்டும் தகுதிச்சான்று பெற்றுக்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. கோட்டாட்சியர் இரா. முத்துமீனாட்சி, வட்டார போக்குவரத்து அலுவலர் செந்தில்குமார், மோட்டார் வாகன ஆய்வாளர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.