சாதிய ஆணவக் கொலையைத் தடுக்கக் கோரி சென்னையில் நடைபெறவுள்ள மாநாட்டில் திருவாரூரிலிருந்து திரளாக பங்கேற்பது என தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
திருவாரூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அதன் மாவட்டக் குழுக் கூட்டத்தில் இதற்கான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தமிழகத்தில் சாதியக் கொடுமைகளுக்கு எதிராக பெரிய அளவிலான மாற்றத்தை உருவாக்கும் வகையிலானப் போராட்டத்தை முன்னெடுக்கவில்லை. கலப்புத் திருமணம் என்ற சாதி மறுப்பு திருமணத்தை ஏற்காத நிலை அதிகரித்துள்ளது.
மேலும் ஹைதராபாத் பல்கலைக் கழக மாணவர் ரோகித்வெமுலா, தில்லி பல்கலைக் கழக மாணவர் முத்துகிருஷ்ணன் ஆகியோர் சாதியின் பெயரால் இறந்துள்ளனர். இதுபோன்ற சாதிய கொடுமைகள் அதிகரித்து வரும் நிலையில், சாதிய கொலைகளை தடுக்க தனிச் சட்டம் இயற்ற வேண்டும். மாநில தாழ்த்தப்பட்டோர் நல ஆணையம் அமைக்க வேண்டும். தமிழகம் முழுவதும் மாவட்ட அளவில் மாவட்டக் கண்காணிப்பாளர் தலைமையில் விழிப்புணர்வு கண்காணிப்புக் குழு அமைக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.
மேலும், இக்கோரிக்கைகளை முன்வைத்து மே 27, 28- ஆம் தேதிகளில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணு தலைமையில் சென்னையில் நடைபெறும் மாநில மாநாட்டில் திருவாரூர் மாவட்டத்திலிருந்து, தனி பேருந்து மற்றும் ரயில் மூலம் 500 பேர் பங்கேற்பது என முடிவு செய்யப்பட்டது.
விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலர் ஞானமோகன் தலைமையில் நடைபெற்ற ஒருங்கிணைப்பாளர் ஜி. நேதாஜி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் வை. செல்வராஜ் உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.