மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு, திருவாரூர் மாவட்டத்தில் கிளைகள் தோறும், சிலைகள் நிறுவுவது என திருவாரூரில் புதன்கிழமை நடைபெற்ற அதிமுக செயல் வீரர்கள், வீராங்கனைகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
தமிழகத்தை முன்னோடி மாநிலமாக்க அதிமுகவையும், அதிமுக அரசைக் காக்கவும் திருவாரூர் மாவட்டக் கழகம் உறுதுணையாக இருப்பது. எம்ஜிஆரின் நூற்றாண்டு விழாவை கிளைக் கழகம், ஊராட்சி, பேரூராட்சி, ஒன்றியம், நகரம் மற்றும் மாவட்டக் கழகம் சார்பில் அனைத்துப் பகுதிகளிலும் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் கொண்டாடுவது.
அதிமுக அரசு மீது காழ்ப்புணர்ச்சி காரணமாக திமுக உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் செய்து வரும் பொய்ப் பிரசாரத்தை முறியடிக்கும் வகையில், தமிழக அரசின் ஓராண்டு சாதனைகளை மக்களிடம் விளக்கிக் கூற பிரசாரம் மேற்கொள்வது.
ஜெயலலிதா அரசின் சாதனைகளை விளக்கிக் கூறி நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் 100 சதவீதம் வெற்றி பெற பாடுபடுவது உள்ளிட்ட தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.
மேலும், திருவாரூர் தியாகராஜர் கோயில் ஆழித்தேரோட்டத்துக்கு உதவிகள் அளித்து வருவதற்கும், கூத்தாநல்லூர் பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று கூத்தாநல்லூர் தனி வட்டமாக அறிவிக்கப்பட்டதற்கும் தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
கட்சியின் மாவட்ட அவைத் தலைவர் கோ. அருணாசலம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், தமிழக உணவுத் துறை அமைச்சர் ஆர். காமராஜ் சிறப்புரையாற்றினார். நாகப்பட்டினம் நாடாளுமன்ற உறுப்பினர் கே. கோபால், முன்னாள் பேரவை உறுப்பினர் அசோகன், நகரச் செயலர் மூர்த்தி, கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகச் சாலை தலைவர் கலியபெருமாள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.