ஜாக்டோ - ஜியோ சாலை மறியல்: திருவாரூர் மாவட்டத்தில் 2,397 பேர் கைது

கோரிக்கைகளை வலியுறுத்தி, திருவாரூர் மாவட்டத்தில் ஜாக்டோ - ஜியோ சார்பில் வியாழக்கிழமை  நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் 2,397 பேர் கைது செய்யப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
Updated on
2 min read

கோரிக்கைகளை வலியுறுத்தி, திருவாரூர் மாவட்டத்தில் ஜாக்டோ - ஜியோ சார்பில் வியாழக்கிழமை  நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் 2,397 பேர் கைது செய்யப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். 7-ஆவது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும். அதுவரையில் 2016  ஜனவரி  1 முதல் இடைக்கால  நிவாரணமாக  20 சதவீதம்  வழங்க வேண்டும்.  சிறப்பு, தொகுப்பு  மற்றும்  காலமுறை  ஊதியங்களில் பணியாற்றும்  ஊழியர்களுக்கு  வரையறுக்கப்பட்ட  ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஊழியர்-ஆசிரியர் சங்கங்களின் போராட்டக்குழு (ஜாக்டோ -  ஜியோ) சார்பில் இப்போராட்டம் நடைபெற்றது.
திருவாரூரில்...
திருவாரூரில் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற சாலை மறியலில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் என 260 பேரும், நன்னிலம் பேருந்து நிலைய பாலம் அருகே நடைபெற்ற மறியல் போராட்டத்தில் 650 பேரும் கைது செய்யப்பட்டனர்.
மாவட்டத்தில் திருவாரூர், நன்னிலம், குடவாசல், நீடாமங்கலம், மன்னார்குடி,  திருத்துறைப்பூண்டி என மாவட்டம் முழுவதும் மொத்தம் 6 இடங்களில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் 1,453 பெண்கள் உள்ளிட்ட 2,397 பேர் கைது செய்யப்பட்டு, மாலையில் விடுதலை செய்யப்பட்டனர்.
போராட்டம் காரணமாக, ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் அனைத்து அரசு அலுவலகங்களிலும் பணிகள் பாதிக்கப்பட்டன. ஆசிரியர்கள் போராட்டம் காரணமாக பள்ளிகள் சரிவர செயல்படவில்லை.
குடவாசலில்...
ஜாக்டோ - ஜியோ அமைப்பின் சார்பில்  குடவாசலில் வியாழக்கிழமை சாலை மறியல் நடைபெற்றது.
குடவாசல் ஒன்றியம் மற்றும் கொரடாச்சேரி ஒன்றியம் சார்பில் குடவாசல், ஓகையில், நடைபெற்ற மறியல் போராட்டத்தில், ஜாக்டோ-ஜியோ அமைப்பின் கூட்டு நடவடிக்கைக்குழு நிர்வாகிகள் ரவிச்சந்திரன், குணசேகரன், ஆசிரியர் மன்றத்தின் மாவட்ட செயலாளர் ரவி ஆகியோர் தலைமையில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் ஏராளமானோர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.  சுமார் ஒரு மணிநேரம் நடைபெற்ற இந்த சாலை மறியல் போராட்டத்தால் திருவாரூர்-கும்பகோணம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.  பின்னர் போராட்டத்தில் கலந்துகொண்ட 362 பெண்கள் உட்பட 672 கைதாகி மாலை விடுதலை செய்யப்பட்டனர்.
ஜாக்டோ-ஜியோ போராட்டத்தால் குடவாசல் மற்றும் கொரடாச்சேரி ஒன்றியத்தில் உள்ள பெரும்பாலான பள்ளிகள் செயல்படவில்லை.  அதேபோல் குடவாசல் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் பூட்டப்பட்டிருந்தது.
நீடாமங்கலத்தில்...
ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பின் மாநில மைய முடிவின்படி நீடாமங்கலத்தில் வியாழக்கிழமை   சாலை மறியல் மற்றும் கோரிக்கைகளை வலியுறுத்தி   அரசு ஊழியர் சங்க நிர்வாகி  கோ.கெளதமன் முன்னிலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் பல்வேறு சங்கங்களின் நிர்வாகிகள் மு.மோகன்,  ரவிதாசன் மயில்வாகனன், அற்புதராஜ் ரூஸ்வெல்ட்,  முரளி,  முருகேசன்,  மாதவராஜ், பொற்செல்வி,  மல்லிகா, தேன்மொழி மற்றும் பலர் வாழ்த்துரை வழங்கினர். 150 பெண்கள் உள்ளிட்ட 250 பேர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மன்னார்குடியில்...
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பின் சார்பில் மன்னார்குடியில் பேரணியாகச் சென்று, சாலை மறியலில் ஈடுபட்ட 600 பேர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
வ.உ.சி. சாலை, நகராட்சி அலுவலகம் அருகே தொடங்கிய பேரணிக்கு  போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர்கள் சி. பிரகாஷ், சுவிக்கிங்ராஜ் ஆகியோர் தலைமை வகித்தனர். பேரணியில் பங்கேற்றவர்கள், நகரின் முக்கிய வீதிகளின் வழியாகச் சென்று மேலராஜவீதி, தந்தை பெரியார் சிலை அருகே சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
மன்னார்குடி காவல் துணைக் கண்காணிப்பாளர் வ. அசோகன் மற்றும் போலீஸார், மறியலில் ஈடுபட்ட ஜாக்டோ - ஜியோ அமைப்பைச் சேர்ந்த 600 பேரை கைது செய்து, பின்னர் விடுவித்தனர்.
திருத்துறைப்பூண்டியில்...
திருத்துறைப்பூண்டி   புதிய பேருந்து நிலையம் அருகே சாலைமறியலில் ஈடுபட்ட   அரசு ஊழியர் சங்க செயலர் டி.மணிவண்ணன், ஆசிரியர்  கூட்டமைப்பைச் சேர்ந்த ரவீந்திரகுமார் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோரை வியாழக்கிழமை போலீஸார் கைது செய்தனர்.
 இதில் வட்டாட்சியர்அலுவலகம்,  ஊராட்சி ஒன்றியம்,  அரசு   மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருந்தாளுனர்கள்,  எக்ஸ்ரே  ஆய்வக உதவியாளர்கள்,  சாலைப் பணியாளர்கள்,  கிராம உதவியாளர்கள்,  சத்துணவுப்  பணியாளர்கள்,   ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com