பிறந்த நாள் விழா மற்றும் நன்றி அறிவிப்புப் பொதுக் கூட்டத்துக்காக 2016-ஆம் ஆண்டு ஜூலை 5-ஆம் தேதி திருவாரூர் வருகை தந்ததே அவரது தொகுதிக்கான இறுதி வருகையாகவும், அன்றைய பொதுக்கூட்டத்தில் பேசியதே திருவாரூர் தொகுதியில் அவரது இறுதி உரையாகவும் அமைந்துள்ளது.
திருவாரூக்கு திமுக தலைவர் மு. கருணாநிதி 2016 ஜூலை 5 -ஆம் தேதி, பிறந்தநாள் விழா மற்றும் நன்றி அறிவிப்புக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக வந்தார். திருவாரூர் -தஞ்சை சாலையில் அமைக்கப்பட்டிருந்த அரங்கில் காலையில் நடைபெற்ற கவியரங்கை, முழுவதும் முன்வரிசையில் அமர்ந்திருந்து ரசித்தார்.
பின்னர் மாலையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று அவர் பேசியது:
திருவாரூரில் இன்று நடப்பது விழாவா அல்லது மாநாடா என்ற அளவுக்கு எனது மனதில் மகிழ்ச்சி ததும்புகிறது. இங்கு பேசுவதற்கு உடல்நிலை காரணமாக தொண்டை பேச மறுக்கிறது. தொண்டை மறுத்தாலும் எனது தொண்டை (பணியை) தொடர்ந்து செய்வேன். தேர்தலுக்காக மட்டும் மக்களை சந்திக்கும் அரசியல் கட்சி திமுக அல்ல. அரசியல் மற்றும் தேர்தலை பயன்படுத்தி தமிழ்நாட்டுக்கு, தமிழர்களுக்கு முன்னேற்றத்தை பெற்றுத்தரும் விடுதலை இயக்கமாக திமுக இருந்து வருகிறது. திமுகவை அழித்தொழிக்க எந்த கொம்பனாலும் முடியாது. இந்தியாவில் நடைபெற்ற தேர்தல்களில் தமிழகத்தில் மட்டும் திமுக ஆட்சிக்கு வரக்கூடாது என்பதில் பல சக்திகள் இணைந்து செயல்பட்டன. திமுக ஆட்சிக்கு வந்தால் திராவிடன் மார்பை நிமிர்த்திக் கொண்டு நடப்பான். திராவிடர்களுக்கு நன்மை கிடைக்கும் என்பதனாலேயே திமுகவுக்கு எதிரான வேலைகள் நடந்தேறின.
இப்போது தோல்வி படிக்கட்டில் நின்று கொண்டிருக்கிறோம். இதிலிருந்து வெற்றி படிக்கட்டை மிதிக்க வேண்டும். சில ஆண்டுகளில் சில மாதங்களில் ஆட்சி மாற்றம் ஏற்படலாம். தேர்தலை ஒட்டி ரூ. 570 கோடி, கண்டெய்னர் லாரியில் சென்றது யாருடையது என்று சட்டப்பேரவையில் ஸ்டாலின், துரைமுருகன் போன்றவர்கள் கேட்டதற்கு பதில் சொல்லாமல் சபையிலிருந்து வெளியேற்றப்பட்டார்கள். இதையடுத்து கட்சி வழக்குரைஞர் மூலம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததையடுத்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டப்பட்டுள்ளது. அதேபோல், டிஎஸ்பி விஷ்ணுப்பிரியா கொலைக்கும் உரிய விசாரணை வேண்டும். இந்த இரண்டு சம்பவங்களுக்கும் நீதிமன்றம் தலையிட்டு உரிய விசாரணை நடத்த வேண்டும். நீதி கிடைக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் நீதியே, நீயும் இருக்கின்றாயா இல்லை கொலைக்களத்தில் இறந்து விட்டாயா என்று கோவலன் இறந்தபோது கவுந்தியடிகள் பாடியது போன்றுதான் சொல்லத் தோன்றும் என்றார்.