மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குநர்களுக்கு தமிழக அரசு அறிவித்தப்படி, ஊதிய நிர்ணயம் செய்து, பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி, நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சி.ஐ.டி.யு. சார்பில் மனு கொடுக்கும் இயக்கம் திங்கள்கிழமை நடைபெற்றது.
கிராம ஊராட்சிகளில் பணியாற்றும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குநர்களில் 2000-ம் ஆண்டுக்குப் பின் பணியில் சேர்க்கப்பட்டவர்கள் நிரந்தரம் செய்யப்படாமல், மிகக்குறைந்த ஊதியத்தில் பணியாற்றி வருகின்றனர். இந்த ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கி, நிரந்தரம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி, ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர்கள் சங்கம் (சி.ஐ.டி.யு.) சார்பில் பல்வேறு கட்டப் போராட்டங்கள் நடத்தப்பட்டன.
இதன்பயனாக, கடந்த சட்டப் பேரவை கூட்டத் தொடருக்கும் முந்தைய கூட்டத் தொடரில், தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, ஊராட்சிகளில் 2000-ம் ஆண்டுக்குப்பின் பணியமர்த்தப்பட்ட மேல்நிலைத் நீர்த் தேக்கத் தொட்டி இயக்குநர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்கப்பட்டு, பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என சட்டப் பேரவையில் 110-ஆவது விதியின் கீழ் அறிவித்தார். இதைத்தொடர்ந்து, அரசாணையும் வெளியிடப்பட்டது.
இந்நிலையில், நீடாமங்கலம் ஒன்றியத்தில் 2000-ம் ஆண்டுக்குப்பின் பணியமர்த்தப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குநர்களுக்கு, தமிழக முதல்வர் அறிவித்தப்படி, ஊதிய உயர்வு அளித்து, பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர்கள் சங்கம் (சி.ஐ.டி.யு.) சார்பில் மாவட்டத் தலைவர் கே.கோவிந்தராஜ் தலைமையில், நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மனு கொடுக்கும் இயக்கம் நடைபெற்றது.
இதில் சங்க மாநிலத் தலைவர் நா.பாலசுப்பிரணியன், மாவட்டச் செயலாளர் கே.முனியாண்டி, மாவட்ட நிர்வாகிகள் எஸ்.தமிழ்ச்செல்வன், எஸ்.காமராஜ் மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர், ஊராட்சி ஒன்றிய கூடுதல் ஆணையர் சோ.கலைச்செல்வத்திடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவைப் பெற்றுக் கொண்ட அவர், உரிய நடவடிக்கை எடுப்பதாக
உறுதியளித்தார்.