கூத்தாநல்லூர் பகுதியில் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட கல்லூரி மாணவரின் சடலம் 33 மணி நேர தேடுதலுக்குப் பிறகு வியாழக்கிழமை மீட்கப்பட்டது.
கூத்தாநல்லூரைச் சேர்ந்த மரியதாஸ் மகன் ஐசக் ஜக்ரோ (19) . குடவாசல் அருகேயுள்ள மஞ்சக்குடி தயானந்தா கல்லூரியில் பி.காம் முதலாமாண்டு படித்து வந்த இவர் புதன்கிழமை தந்தையுடன் அப்பகுதியிலுள்ள கோரையாற்றில் குளித்து கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக ஐசக்ஜக்ரோ தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட்டார். தகவலறிந்த கூத்தாநல்லூர் தீயணைப்பு நிலைய அலுவலர் கோ. பன்னீர்செல்வம் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் மற்றும் கிராமமக்கள் பலர் ஆற்றுக்குள் இறங்கி ஐசக் ஜக்ரோவை தேடினர்.
ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுவதால் ஆற்றின் இருபுறமும் கயிற்றைக் கட்டிக் கொண்டு, கோரையாற்றிலிருந்து தட்டாங்கோயில் வரை தேடினர். இதில், கோரையாற்று பாலம் பகுதியில் மூங்கில்கள் வளர்ந்திருந்த இடத்திலிருந்து ஐசக் ஜக்ரோவை சடலமாக மீட்டனர். இதுகுறித்து, கூத்தாநல்லூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.