72-ஆவது சுதந்திர தினம் கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் கொண்டாட்டம்: ரூ. 38 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

நாட்டின் 72-ஆவது சுதந்திர தினத்தையொட்டி திருவாரூரில் கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் புதன்கிழமை நடைபெற்ற விழாவில்
Published on
Updated on
2 min read

நாட்டின் 72-ஆவது சுதந்திர தினத்தையொட்டி திருவாரூரில் கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் புதன்கிழமை நடைபெற்ற விழாவில் தேசிய கொடியை ஏற்றி வைத்து, 57 பயனாளிகளுக்கு ரூ. 38 லட்சத்து 85 ஆயிரத்து 20 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் இல.நிர்மல்ராஜ் வழங்கினார்.
 திருவாரூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் 72-ஆவது சுதந்திர தினவிழா நடைபெற்றது. விழாவில், மாவட்ட ஆட்சியர் இல.நிர்மல்ராஜ் தேசிய கொடியை ஏற்றி வைத்து,  காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின்னர், 11 சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு சால்வை அணிவித்து கௌரவித்தார். மேலும், சிறப்பாக பணிபுரிந்தமைக்காக 15 காவல்துறை அலுவலர்கள்,  81 அரசு அலுவலர்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.
 பின்னர், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 5 பயனாளிகளுக்கு ரூ. 25,090 மதிப்பிலான விலையில்லா சலவைப் பெட்டிகள்,  அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் சார்பில் மாற்றுத்திறனுடைய 4 குழந்தைகளுக்கு ரூ.42,185 மதிப்பிலான உதவி உபகரணங்கள், முன்னாள் படைவீரர் நலத்துறை சார்பில் 1 நபருக்கு திருமண மானியமாக ரூ.1 லட்சத்திற்கான காசோலை, வருவாய்த் துறையின் சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் சார்பில் 31 பயனாளிகளுக்கு ரூ. 2,46,500 மதிப்பிலான முதியோர் உதவித் தொகை, திருமண உதவித் தொகை, இயற்கை மரண உதவித் தொகைக்கான ஆணைகள், மாற்றுத்திறனாளி நலத்துறை சார்பில் 5 பயனாளிகளுக்கு ரூ.37 ஆயிரம் மதிப்பிலான உதவி உபகரணங்கள், வேளாண்மைத் துறை சார்பில் 3 பயனாளிகளுக்கு ரூ.45 ஆயிரம் மதிப்பில் ஆயில் எஞ்சின் மானியத்திற்கான காசோலை, தாட்கோ சார்பில் 3 பயனாளிகளுக்கு ரூ.4,81,725 மதிப்பில் சுமை வாகனம், பவர் டில்லர்,  தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் 3 சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.29 லட்சம் மதிப்பிலான வங்கி கடன், தோட்டக் கலைத் துறை சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ.7,520 மதிப்பிலான பழக்கன்றுகள் என மொத்தம் 57 பயனாளிகளுக்கு ரூ.38,85,020 மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் இல.நிர்மல்ராஜ் வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஏ. விக்ரமன், மாவட்ட வருவாய் அலுவலர் க.சக்திமணி, மாவட்ட வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் தெய்வநாயகி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர் ரவிச்சந்திரன், வேளாண்மை இணை இயக்குநர் சந்துரு, வருவாய்க் கோட்டாட்சியர்கள் முருகதாஸ், பத்மாவதி, திருவாரூர் மருத்துவக் கல்லூரி முதல்வர் அழ. மீனாட்சிசுந்தரம், முதன்மைக் கல்வி அலுவலர் ந. மாரிமுத்து உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
கலைநிகழ்ச்சிகள்...
விழாவில் பள்ளி மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கழிப்பறையின் அவசியம் குறித்து வேப்பத்தாங்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவ, மாணவியர் குறு நாடகம் நடத்தினர்.
தொடர்ந்து, பேரளம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர், விவசாயத்தின் பெருமைகள் குறித்து எடுத்துக் கூறினர். இந்தியாவின் கலை, கல்வி, கலாசாரத்தை குறிப்பிடும் வகையில் பூந்தோட்டம் ஸ்ரீ லலிதாம்பிகா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவியர் நடன நிகழ்ச்சி நடத்தினர். சுதந்திரத்தின் மகிமை குறித்து குடவாசல் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவியர் நடனமாடினர். பிளாஸ்டிக்கை ஒழிப்போம் என்ற தலைப்பில் புலிவலம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவியர் நடனமாடினர். 
இந்த கலை நிகழ்ச்சிகளில் வேப்பதாங்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி முதலிடமும், புலிவலம் அரசு மேல்நிலைப்பள்ளி இரண்டாமிடமும், பூந்தோட்டம் ஸ்ரீ லலிதாம்பிகா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மூன்றாமிடமும், குடவாசல் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் பேரளம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிகள் நான்காவது இடமும் பெற்றன. 
வெற்றி பெற்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ் பரிசுகள் வழங்கினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.