Enable Javscript for better performance
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி திருவாரூரில் ரயில் மறியல், முற்றுகையில் ஈடுபட்ட 142 பேர் கைது- Dinamani

சுடச்சுட

    

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி திருவாரூரில் ரயில் மறியல், முற்றுகையில் ஈடுபட்ட 142 பேர் கைது

    By DIN  |   Published on : 03rd April 2018 08:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி திருவாரூரில் ரயில் மறியல் மற்றும் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட 142 பேரை போலீஸார் கைது செய்தனர். 
    காவிரிப் பிரச்னை தொடர்பாக உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், 6 வாரக் காலத்துக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. இக்காலக்கெடு மார்ச் 29-ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் இதுவரை அமைக்கவில்லை. அத்துடன் தீர்ப்பில் உள்ள ஸ்கீம் என்பதற்கான விளக்கத்தை கோரியும், 3 மாத அவகாசம் கேட்டும் மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது. 
    இந்நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும்,  உரிய காலத்தில் காவிரி மேலாண்மை வாரியம்  அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகத்தில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், திருவாரூர் ரயில் நிலையம் அருகில் அனைத்துக் கட்சி சார்பில் திங்கள்கிழமை காலை சுமார் 10.30 மணியளவில் எர்ணாகுளத்திலிருந்து காரைக்கால் வரை செல்லும் எர்ணாகுளம் விரைவு ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    இதில், திமுக, தேமுதிக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மக்கள் அதிகாரம் அமைப்பு, காவிரி மீட்புக்குழு உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் மற்றும் பல்வேறு பொதுநல அமைப்பினர் 80 பேர் பங்கேற்றனர். இதையடுத்து, புதிய தமிழகம் கட்சியினர் 36 பேர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ரயில் மறியல் காரணமாக சுமார் 2 மணி நேரம் தாமதமாக எர்ணாகுளம் விரைவு ரயில் திருவாரூரிலிருந்து காரைக்காலுக்கு புறப்பட்டுச் சென்றது.  
    முற்றுகைப் போராட்டம்: இதேபோல், காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, திருவாரூர் வருமான வரித்துறை அலுவலகத்தை காவிரிப் படுகை வாழ் மக்கள் கூட்டமைப்பினர் மற்றும் தமிழ் தேசிய பேரியக்கம், நாம் தமிழர் கட்சியினர் உள்ளிட்ட 26 பேர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 
    இப்போராட்டத்துக்கு ஒருங்கிணைப்பாளர் சு. செந்தில் தலைமை வகித்தார். திருவாரூரில் ரயில் மற்றும் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட 142 பேரை போலீஸார் கைது செய்து, பின்னர் விடுவித்தனர். 
    சாலை மறியல்: இதேகோரிக்கையை வலியுறுத்தி, திருவாரூர் திருவிக அரசுக் கலைக் கல்லூரி மாணவர்கள் கல்லூரி முன்பு தஞ்சை - நாகை தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.  இதையடுத்து, போலீஸாரின் சுமுகப் பேச்சுவார்த்தையை அடுத்து மாணவர்கள் சாலை மறியலை விலக்கிக்கொண்டனர். 
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai