Enable Javscript for better performance
மாணவர்கள் போராட்டத்தில் மோதல்: ஒருவர் காயம், நான்கு பேர் கைது- Dinamani

சுடச்சுட

    

    மாணவர்கள் போராட்டத்தில் மோதல்: ஒருவர் காயம், நான்கு பேர் கைது

    By DIN  |   Published on : 03rd April 2018 08:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, மன்னார்குடி அரசுக் கல்லூரி மாணவர்கள் திங்கள்கிழமை நடத்திய போராட்டத்தில் கோஷ்டி மோதல் ஏற்பட்டு ஒரு மாணவர் காயமடைந்தார்.
    இதுதொடர்பாக 2 மாணவர்கள் உள்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.
     காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, மன்னார்குடி அரசுக் கல்லூரி மாணவர்கள் திங்கள்கிழமை வகுப்பு புறக்கணிப்பு மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, மாணவர் பெருமன்றத்தின் பதாகையை ஒரு தரப்பு மாணவர்கள் அகற்றினார்களாம். இதனால், மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர்.  தகவலறிந்த மன்னார்குடி காவல் துணைக் கண்காணிப்பாளர் வ. அசோகன், காவல் ஆய்வாளர் மணிவேல் மற்றும் போலீஸாரும், கல்லூரி பேராசிரியர்களும் இருதரப்பு மாணவர்களையும் சமாதானம் செய்துவைத்தனர். பின்னர், கல்லூரி வளாகத்தினுள் மாணவர்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். இந்த மோதலில் இடையர்நத்தம் தனியார் தொழிற்கல்லூரியில் படிக்கும் மாணவர் பெருமன்றத்தைச் சேர்ந்த சந்தோஷ் காயமடைந்தார். அவரை மன்னார்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். 
    இந்த மோதல் தொடர்பாக, அரசுக் கல்லூரி முதல்வர் ரவி, மன்னார்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், கல்லூரிக்குள் புகுந்து மாணவர்கள் நடத்தியப் போராட்டத்தில் கலவரம் ஏற்படுத்தியதாக 9 பேர் மீது புகார் தெரிவித்துள்ளார்.
    இதேபோல், மாணவர்கள் போராட்டத்தில் பிளவு ஏற்படுத்தியதாக ஒரு பேராசிரியர் உள்பட 10 மாணவர்கள் மீது மாணவர் பெருமன்றத்தினர் புகார் அளித்துள்ளனர்.
    நான்கு பேர் கைது...
    கல்லூரி முதல்வர் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸார், மாணவர் பெருமன்றத்தைச் சேர்ந்த அரசுக் கல்லூரி மாணவர்களான விஜயகுமார் (19), முகமது இஸ்லாம் (20) மற்றும் மாணவர் மன்றத்துக்கு ஆதரவாக வெளியிலிருந்து வந்த ஐவர்சமாது பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் (20), முதல்சேத்தி பகத்சிங் (21) ஆகிய நான்கு பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai