Enable Javscript for better performance
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசுக்கு போதிய அழுத்தம் கொடுத்து வருகிறோம்- Dinamani

சுடச்சுட

    

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசுக்கு போதிய அழுத்தம் கொடுத்து வருகிறோம்

    By DIN  |   Published on : 04th April 2018 05:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசுக்கு போதிய அழுத்தம் கொடுத்து வருகிறோம் என்றார் அதிமுக இலக்கிய அணிச் செயலரும், தமிழ்நாடு பாடநூல் நிறுவனத் தலைவருமான பா. வளர்மதி. 
    உச்ச நீதிமன்றத் தீர்ப்பை ஏற்று காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவும், காவிரிநீர் முறைப்படுத்தும் குழுவை உடனடியாக அமைக்கக் கோரியும், காவிரி நதிநீர் பங்கீட்டில் தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்டக் கோரியும், தமிழகத்தின் வாழ்வாதாரத்தையும் தமிழக விவசாயிகளின் நலன்களைக் காக்கவும் அதிமுக சார்பில் மாவட்டத் தலைநகரங்களில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, திருவாரூர் புதிய ரயில் நிலையம் அருகில் உண்ணாவிரதப் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 
    போராட்டத்துக்கு அதிமுக இலக்கிய அணிச் செயலரும், தமிழ்நாடு பாடநூல் நிறுவனத் தலைவருமான பா. வளர்மதி, திருவாரூர் மாவட்டச் செயலரும், தமிழக உணவுத்துறை அமைச்சருமான ஆர். காமராஜ், மீனவர் பிரிவு இணைச் செயலரும், முன்னாள் அமைச்சருமான கே.ஏ. ஜெயபால் ஆகியோர் தலைமை வகித்தனர்.
    போராட்டத்தில், தமிழ்நாடு பாடநூல் நிறுவனத் தலைவர் பா. வளர்மதி பேசியது: காவிரிப் பிரச்னையில் தமிழகமே போராடுகிறது. 6 வாரக் கெடு முடிந்தபிறகு ஸ்கீம் என்ன என்று விளக்கம் கேட்கின்றனர். அழுத்தம் கொடுப்பது குறித்து அனைவரும் பேசுகின்றனர். மத்திய அரசு மீது அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருக்கிறது தமிழக அரசு. இதுபோல யாரும் வழக்குத் தொடர்ந்ததில்லை. அதேபோல் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜிநாமா செய்ய வேண்டும் என்கிறார் திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின். முதலில் அவரது கட்சி எம்எல்ஏக்கள், எம்பிக்கள் ராஜிநாமா செய்யட்டும். தற்போது முதல்வர், துணை முதல்வர் உள்பட அனைவரும் உண்ணாவிரதப் போராட்டம் இருக்கிறோம். எனவே, எங்களால் முடிந்தவரை அழுத்தம் கொடுத்து வருகிறோம்.  இதைவிட வேறு யாரும் அழுத்தம் கொடுத்து விடமுடியாது. 
    இங்கே வெற்றிடம் என்பது இல்லை. 1972-இல் எம்ஜிஆரால் விதையாக உருவான அதிமுக, தற்போது ஆலமரமாக வளர்ந்து நிற்கிறது. அதிமுக விவசாயிகளுக்கான கட்சி. அப்பல்லோவில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட 2-ஆம் நாள் மிகவும் பரபரப்பாக இருந்து. அதிகாரிகளிடம் என்ன என்று கேட்டபோது, காவிரிப் பிரச்னை குறித்து நீதிமன்றத்தில் கூறப்பட வேண்டிய கருத்துகள், குறிப்புகளை ஜெயலலிதா எடுத்துக் கூறினார் என்று தெரிவித்தனர். தமது உடல்நிலை பாதிக்கப்பட்டபோதும், தமிழக மக்களின் வாழ்வாதாரத்தைக் காப்பதில் ஜெயலலிதா மிகுந்த அக்கறை காட்டினார். எனவே, எம்ஜிஆர் வழியில், ஜெயலலிதா வழியில் ஆட்சி நடத்தும் அதிமுகவை யாராலும் அழிக்க முடியாது என்றார் வளர்மதி. 
    போராட்டத்தில் அமைச்சர் ஆர். காமராஜ் பேசியது: தமிழகத்தின் ஜீவநதியாக விளங்குவது காவிரி. தமிழகத்தில் மன்னர்கள் காலம் தொட்டு ஆங்கிலேயர்கள் காலம் வரை போற்றி பாதுகாத்து வந்த காவிரிநீர் உரிமையை கருணாநிதி தலைமையிலான திமுக அரசு விட்டுக் கொடுத்து விட்டது. 1924 -ஆம் ஆண்டு ஆங்கிலேயர் காலத்தில் புதுப்பிக்கப்பட்ட காவிரி நீர் பங்கீட்டு ஒப்பந்தத்தை 50 ஆண்டுகளுக்குப் பிறகு 1974 - இல் புதுப்பித்திருக்க வேண்டும். ஆனால், அப்போதைய திமுக அரசின் முதல்வர் கருணாநிதி, சர்க்காரியா ஊழலில் இருந்து தன்னை காப்பாற்றிக் கொள்வதற்காக ஒப்பந்தத்தை புதுப்பிக்காமலே கிடப்பில் போட்டு விட்டார். அதுமுதல் காவிரியில் தமிழகத்தின் உரிமை திமுகவால் கேள்விக்குறியாக மாறியது. 
     காவிரி நீர் பிரச்னையைத் தீர்க்க தீர்ப்பாயம் அமைக்க வேண்டும் என முதன்முதலாக 1986-இல் அன்றைய அதிமுக ஆட்சியின் முதல்வர் எம்ஜிஆரால் கோரிக்கை விடுக்கப்பட்டது. இக்கோரிக்கை வலுப்பெற்றதன் அடிப்படையிலும், உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையிலும் காவிரி தீர்ப்பாயம் அமைக்கப்பட்டது. இதையடுத்து, காவிரி நீர் பிரச்னையில் தெளிவான நிலைப்பாட்டை எடுத்து சட்டப் போராட்டம் நடத்தி,  நடுவர் மன்றத் தீர்ப்பையும் அரசிதழில் வெளியிட ஜெயலலிதா நடவடிக்கை எடுத்தார். தற்போது உச்ச நீதிமன்ற இறுதித் தீர்ப்பு வந்தபோதும் மத்திய அரசு அதை செயல்படுத்த மறுக்கிறது.
     இதை தமிழக அரசுடன் இணைந்து தட்டிக்கேட்க வேண்டிய திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சுயநலத்துடன் செயல்படுகின்றனர். காவிரிப் பிரச்னையை அரசியலாக்கி, அதன்மூலம் அரசியல் லாபம் கிடைக்குமா ? என்று நினைக்கின்றனர்.  இதற்கு இறுதித் தீர்வு ஏற்படுத்தும் வகையில் தற்போது அதிமுக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது. டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரம் காக்க, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்றார் காமராஜ். 
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai