போராட்டங்களை ஒடுக்க நினைப்பது தவறான விளைவுகளை ஏற்படுத்தும்
By DIN | Published on : 05th April 2018 01:35 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
போராட்டங்களை ஒடுக்க நினைத்தால் தவறான விளைவுகளை ஏற்படுத்தும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் இரா. முத்தரசன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில 24 - ஆவது மாநாடு மன்னார்குடியில் மார்ச் 28-இல் தொடங்கி முதல் 31-ஆம் தேதி வரை நடைபெற்றது. மாநாட்டின் நிறைவாக நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு ஆகியவற்றை உடனடியாக அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி ஏப்.4-இல் தமிழ்நாடு முழுவதும் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி, மாநிலம் முழுவதும் புதன்கிழமை பல்லாயிரக்கணக்கானோர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் போலீஸார் அத்துமீறி நடந்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் பேரளம் ரயில் நிலையம் அருகே ரயில் மறியல் செய்ய சென்றவர்களை துப்பாக்கியை காட்டி மிரட்டி அச்சுறுத்தியுள்ளனர். செயற்கையாக தள்ளு முள்ளுவை உருவாக்கி போராட்டத்தை ஒடுக்க நினைத்துள்ளது போலீஸார். இதேபோல், திருப்பூர் மாவட்டத்திலும் போலீஸார் அத்துமீறி செயல்பட்டுள்ளனர்.
மத்திய அரசுக்கு உதவும் உள் நோக்கத்துடன் செயல்பட்டு கலகம் விளைவிக்க முயற்சிக்கும் போலீஸாரை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல்துறையின் சட்ட அத்துமீறல் தொடர்ந்தால், அது தவறான விளைவுகளை ஏற்படுத்தும். மேலும், காவிரி நீர் உரிமையை பாதுகாக்க நடைபெறும் போராட்டங்கள் தொடரும், தீவிரமாகும் என தெரிவிக்கப்
பட்டுள்ளது.