Enable Javscript for better performance
காவிரி விவகாரம்: திருவாரூர் மாவட்டத்தில் 43 இடங்களில் சாலை மறியல்: 2,800 பேர் கைது- Dinamani

சுடச்சுட

    

    காவிரி விவகாரம்: திருவாரூர் மாவட்டத்தில் 43 இடங்களில் சாலை மறியல்: 2,800 பேர் கைது

    By DIN  |   Published on : 06th April 2018 06:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, திருவாரூர் மாவட்டத்தில் 43 இடங்களில் வியாழக்கிழமை நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் 2, 800 பேர் கைது செய்யப்பட்டனர்.
    மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததைக் கண்டித்து, கடந்த 4 நாள்களாக திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. மேலும் இந்த கோரிக்கையை வலியுறுத்தி ஏப்.5-இல் முழு அடைப்பு நடத்தப்படும் என திமுக தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
    அதன்படி, திருவாரூர் மாவட்டத்தில் சாலை மறியல் போராட்டம் 43 இடங்களில் நடைபெற்றன. இதில் பங்கேற்ற 2, 800 பேர் கைது செய்யப்பட்டு, மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
    திருவாரூரில் மேம்பால ரவுண்டானாவில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. முன்னதாக நாகை சாலையில் உள்ள வர்த்தகர் சங்க கட்டடத்திலிருந்து ஊர்வலமாக வந்து, மேம்பால ரவுண்டானா சாலையில் அமர்ந்தனர். இதனால் பேருந்துகள், தஞ்சை மற்றும் நாகை பகுதிகளுக்கு செல்வதற்கும், அங்கிருந்து வந்த பேருந்துகள் திருவாரூர் பேருந்து நிலையத்துக்குள்ளும் செல்ல முடியவில்லை. 
    இப்போராட்டத்துக்கு திமுக ஒன்றியச் செயலர் தேவா தலைமை வகித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் விவசாயிகள் சங்க மாவட்டச் செயலர் பி.எஸ். மாசிலாமணி, காங்கிரஸ் கட்சியின் நகரத் தலைவர் சம்பத், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொறுப்பாளர் இடிமுரசு உள்ளிட்ட  பலர் பங்கேற்றனர்.இப்போராட்டத்தில் பங்கேற்ற 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
    இதேபோல், திருவாரூர் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற மறியலில் திமுக முன்னாள் நகரச் செயலர் சங்கர், இளைஞரணி மாவட்ட துணை அமைப்பாளர் ரஜினிசின்னா ஆகியோர் தலைமை வகித்தார். இதில் பங்கேற்றவர்கள் கைது செய்யப்பட்டு, மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
    மன்னார்குடியில்...
    மன்னார்குடி காந்திஜி சாலையில் உள்ள நகர திமுக அலுவலகத்திலிருந்து, தொகுதி எம்எல்ஏ டி.ஆர்.பி. ராஜா தலைமையில், திமுக கூட்டணிக் கட்சியினர் நகரின் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக வந்து, பேருந்து நிலையத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.  இப்போராட்டத்தில் ஈடுபட்ட, முன்னாள் எம்பி ஏ.கே.எஸ். விஜயன், முன்னாள் எம்எல்ஏ பி. ராஜமாணிக்கம், தலைமை செயற்குழு உறுப்பினர் ஜி. பாலு, நகரச் செயலர் வீரா. கணேசன், ஒன்றியச் செயலர் க. தனராஜ், மாநில மாணவரணி துணைச் செயலர் த. சோழராஜன், மதிமுக மாவட்டச் செயலர் பி. பாலச்சந்திரன்,திராவிடர் கழக மாவட்டத் தலைவர் ஆர்.பி.எஸ். சித்தார்த்தன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில துணைச் செயலர் ஆர். ரமணி, காங்கிரஸ் நகரத் தலைவர் ஆர். கனகவேல், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலர் வி. கலைச்செல்வன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நகரக் குழு நிர்வாகி த. ஜெகதீசன் உள்ளிட்ட 205 பேர் கைது செய்யப்பட்டனர்.
    இதேபோல், கோட்டூர் பேருந்து நிறுத்தம் அருகே சாலை மறியலில் ஈடுபட்ட திமுக வடக்கு ஒன்றியச் செயலர் பால. ஞானவேல், திருத்துறைப்பூண்டி எம்எல்ஏ ப. ஆடலரசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் வை. சிவபுண்ணியம் உள்ளிட்ட 325 பேர் கைது செய்யப்பட்டனர். 
    கோட்டூர் தெற்கு ஒன்றியம் சார்பில், பெருகவாழ்ந்தான் பேருந்து நிறுத்தம் அருகே சாலை மறியலில் ஈடுபட்ட திமுக ஒன்றியச் செயலர் வி.எஸ்.ஆர். தேவதாஸ் உள்ளிட்ட  240 பேர் கைது செய்யப்பட்டனர். 
     இதேபோல்,  வடுவூரில் தஞ்சை பிரதான சாலை அண்ணாசிலை அருகே, சாலை மறியலில் ஈடுபட்ட நீடாமங்கலம் திமுக தெற்கு ஒன்றியச் செயலர் வீ. மாயவநாதன் உள்ளிட்ட110 பேர் கைது செய்யப்பட்டனர்.
    கூத்தாநல்லூரில்...
    கூத்தாநல்லூர் லெட்சுமாங்குடி பாலத்தில் நடைபெற்ற  சாலை மறியலுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தேசியக்குழு உறுப்பினரும், மாதர் சங்க மாநிலத் தலைவியுமான பி. பத்மாவதி தலைமை வகித்தார். திமுக நகரச் செயலாளர் எஸ்.எம். காதர் உசேன் உள்ளிட்டோர் முன்னிலை  வகித்தனர். இதில் ஈடுபட்ட 61 பேரை போலீஸார் கைது செய்தனர்.
    இதேபோல், கமலாபுரம் பாலத்தில் கிழக்கு ஒன்றியச் செயலாளர் ஐ.வி. குமரேசன் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்ட 97 பேரும், கோரையாற்றுப் பாலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய நிர்வாக் குழு உறுப்பினர் மணியரசன் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்ட 11 பேரும் கைது செய்யப்பட்டு, மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
    திருத்துறைப்பூண்டியில்..
    திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையம், நெடும்பலம், ஆலத்தம்பாடி, விளக்குடி, பிச்சன்கோட்டகம், மணலி உள்ளிட்ட 5 இடங்களில் திமுக, விடுதலைச் சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சியினர் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதேபோல், முத்துப்பேட்டை பழைய பேருந்து நிலையம், ஆலங்காடு, இடையூர், பாண்டி, இடும்பவனம் உள்ளிட்ட 6 இடங்களில் சாலைமறியல் நடைபெற்றது. மறியலில் ஈடுபட்ட சுமார் 100 பேரை போலீஸார் கைது செய்து மாலையில் விடுவித்தனர். அத்துடன், முத்துப்பேட்டை கடலோர கிராமப் பகுதியில் மீனவர்களும் வேலைநிறுத்தத்தில் பங்கேற்று கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.
    நீடாமங்கலத்தில்...
    நீடாமங்கலத்தில் திமுக வடக்கு ஒன்றியச் செயலர் விசு. அண்ணாதுரை தலைமையில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில், நகர காங்கிரஸ் தலைவர் கௌதமன், திராவிடர் கழக ஒன்றியத் தலைவர் கணேசன், நகரத் தலைவர் அமிர்தராஜ், வழக்குரைஞர் சோம. செந்தமிழ்ச்செல்வன், திமுக மாவட்ட மகளிரணி அமைப்பாளர் ராணிசேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 
    ஒளிமதியில்: இதேபோல், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், அக்கட்சியின் நீடாமங்கலம் ஒன்றியச் செயலர் நடேச. தமிழார்வன் தலைமையில் ஒளிமதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இரு இடங்களில் நடைபெற்ற சாலை மறியலில் ஈடுபட்ட 110 பேரை போலீஸார் கைது செய்து பின்னர் விடுவித்தனர்.
    வலங்கைமானில்...
    வலங்கைமானில் திமுக மேற்கு ஒன்றியச் செயலாளர் வீ. அன்பரசன், கிழக்கு ஒன்றியச் செயலாளர் தெட்சிணாமூர்த்தி ஆகியோர் தலைமையில் அக்கட்சியின் நகரச் செயலாளர் சிவநேசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலாளர் தங்கமுத்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒன்றியச் செயலாளர் ராதா, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகி ராதா மற்றும் சமத்துவ மக்கள் கட்சி, மதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீஸார் கைது செய்து அழைத்துச் சென்றனர்.
    வலங்கைமான், ஆவூர், ஆலங்குடி ஆகிய பகுதிகளில் கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai