சாலை விபத்தில் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் சாவு
By DIN | Published on : 06th April 2018 06:46 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
திருத்துறைப்பூண்டி அருகே கிழக்குக் கடற்கரைச் சாலையில், வியாழக்கிழமை நடைபெற்ற விபத்தில் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். மேலும் இருவர் படுகாயமடைந்தனர்.
திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள மேட்டுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜேந்திரன் (20). இவர் நாகை மாவட்டம், ஈசனூர் கிராமத்தில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில், இரண்டாமாண்டு படித்து வருகிறார். வியாழக்கிழமை எதிர்க்கட்சிகளின் முழுஅடைப்புப் போராட்டம் காரணமாக பேருந்து இல்லாததால், இருசக்கர வாகனத்தில் கல்லூரிக்குச் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, கொருக்கை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் முதலமாண்டுப் படித்து வரும் பிச்சன்கோட்டகம் தென்பாதி கிராமத்தைச் சேர்ந்த காமாட்சி மகன் காமராஜ் (17), ஆதிரெங்கம் பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்த அருள்தாஸ் ஆகிய இருவரும் விஜேந்திரனிடம் "லிப்ட்' கேட்டு கல்லூரிக்குச் சென்றனர்.
பாமணி கிராமத்தில் கிழக்குக் கடற்கரைச் சாலையில், திருத்துறைப்பூண்டி நோக்கி வந்த டிப்பர் லாரி, இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் காமராஜ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
மற்ற இருவரும் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து திருத்துறைப்பூண்டி போலீஸார் வழக்குப்பதிந்து தலைமறைவான டிப்பர் லாரி டிரைவரைத் தேடிவருகின்றனர்.