Enable Javscript for better performance
திருவாரூர் மாவட்டத்தில் முழு அடைப்பு போராட்டம்: குறைவான பேருந்துகளே இயக்கம்- Dinamani

சுடச்சுட

    

    திருவாரூர் மாவட்டத்தில் முழு அடைப்பு போராட்டம்: குறைவான பேருந்துகளே இயக்கம்

    By DIN  |   Published on : 06th April 2018 06:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, திருவாரூர் மாவட்டத்தில் அனைத்துக் கட்சி சார்பில் முழு அடைப்பு போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த போராட்டம் காரணமாக குறைவான அளவு பேருந்துகளே இயக்கப்பட்டன.
    திருவாரூரில் நகைக்கடைகள், காய்கறிகடைகள், ஜவுளிக்கடைகள் உள்ளிட்ட அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து ஆட்டோ, வேன் உள்ளிட்ட வாகனங்கள் இயங்கப்படவில்லை. காலையில் குறைவான அளவு அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டன. பின்னர் நடைபெற்ற சாலை மறியல் போராட்டங்கள் காரணமாக நண்பகலுக்குப் பிறகு பேருந்துகள் இல்லாமல் பேருந்து நிலையத்தில் நின்றிருந்த பொதுமக்களுக்கு சிரமம் ஏற்பட்டது.
    மேலும் முகூர்த்த நாள் என்பதால் பல்வேறு இடங்களில் திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு காலையில் சென்றவர்கள், நிகழ்ச்சி முடிந்ததும்  திரும்பிச் செல்ல பேருந்துகள் இல்லாததால் சிரமப்பட்டனர்.
    இதற்கிடையில், பாதுகாப்பு பணிகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் பல்வேறு இடங்களில் ஆய்வு செய்தார்.  திருவாரூர் புதிய ரயில் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட பின்னர் அவர் கூறியது:
     திருவாரூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் போராட்டங்களால் எந்தவித அசம்பாவிதங்களும் நடைபெறாத வகையில் பாதுகாப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 
    ரோந்துப் பணிகளும் அதிகப்படுத்தப்பட்டுள்ளன. அத்துடன் பேருந்துகள் பாதுகாப்புடன் இயக்கப்படுகின்றன. இதுவரை எவ்வித பாதிப்புகளும் ஏற்படவில்லை என்றார்.
    மன்னார்குடியில்...
    மன்னார்குடி நகரம், கோட்டூர், வடுவூர், பெருகவாழ்ந்தான் உள்ளிட்ட பகுதிகளில் பெரிய வர்த்தக நிறுவனங்கள் முதல் சிறிய பெட்டிக் கடைகள் வரை அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன.
    பேருந்துகள் வழக்கம்போல் இயங்கிவந்த நிலையில், திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் பகல் 11 மணியளவில் சாலை மறியலில்  ஈடுபட்டதையடுத்து, மன்னார்குடி பேருந்து நிலையத்திலிருந்து பல்வேறு பகுதிகளுக்கு செல்லவிருந்த அரசுப் பேருந்துகள் பணிமனைக்கு கொண்டு செல்லப்பட்டன. 
    தனியார் பேருந்துகளும் வேறு இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. இதனால், பேருந்து நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது. திடீரென பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதியடைந்தனர். மன்னார்குடியில் உள்ள திரையரங்குகளில் காலை, மதியம் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன.
    நீடாமங்கலத்தில்...
    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நீடாமங்கலத்தில் வர்த்தகர் சங்கத் தலைவர் ராஜாராமன் தலைமையில் கடையடைப்பு நடைபெற்றது. இதனால், நீடாமங்கலம் கடைத்தெரு வெறிச்சோடிக் காணப்பட்டது. ரயில் நிலையத்தில் போலீசாரின் பாதுகாப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டிருந்து.
    கூத்தாநல்லூரில்...
    கூத்தாநல்லூர் பகுதியில், கூத்தாநல்லூர், லெட்சுமாங்குடி, மரக்கடை, பொதக்குடி, அத்திக்கடை, சேகரை, பூதமங்கலம், வடபாதிமங்கலம், கமலாபுரம், வேளுக்குடி உள்ளிட்ட இடங்களிலும் அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன.
    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி குடவாசல், கொரடாச்சேரி, எரவாஞ்சேரி சுற்றியுள்ள பகுதிகளில் வணிக நிறுவனங்கள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai