Enable Javscript for better performance
குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வது அவசியம்: ஆட்சியர்- Dinamani

சுடச்சுட

    

    குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வது அவசியம்: ஆட்சியர்

    By DIN  |   Published on : 07th April 2018 01:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    குழந்தைகள் பாதுகாப்பு இல்லங்களில் உள்ள குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என, திருவாரூர் மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ் அறிவுறுத்தினார்.
    திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்புக் குழு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்று. மாவட்ட நீதிபதி ஆர். கலைமதி, மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ் ஆகியோர் தலைமை வகித்தனர்.
    கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பேசியது:
     மாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்புக் குழுவின் நோக்கமே, மாவட்டத்தில் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்பதாகும். குழந்தைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும்போது சட்டத்துக்குள்பட்டு, உரிய விசாரணையுடன் 1 மாதத்துக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும். இதை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்புக் குழு உறுதி செய்ய வேண்டும். 
     குழந்தைகள் பாதுகாப்பு இல்லங்களில் உள்ள குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். குழந்தைகள் பாதுகாப்பு இல்லம் நடத்துபவர்களுக்கு குழந்தை பாதுகாப்பு சட்டங்கள் குறித்து பயிற்சி அளிக்க வேண்டும். அத்துடன் அங்கு வளரும் குழந்தைகளின் நலனை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய இலவச தொலைபேசி எண் 1098 என்பதை பொதுமக்களுக்கு தெரியும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றார்.
    மாவட்ட முதன்மை நீதிபதி ஆர். கலைமதி பேசியது:
     குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள், குழந்தைகளின் பாதுகாப்பு என்பதே முதன்மையாக கொண்டு ஈடுபாட்டோடு பணியாற்ற வேண்டும். கல்வி இடைநிற்றல் குழந்தைகளை கண்டறிந்து, அவர்களுக்கு உண்டான குறைகளைக் கேட்டு, கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துக்கூறி, பள்ளிக்கல்வி பெற வழிவகை செய்யவேண்டும்.
     குழந்தைகள் பாதுகாப்பு இல்லங்களில் குழந்தைகளிடம் அலுவலர்கள் தனியாக சந்தித்து அவர்களின் குறைகளை கேட்க வேண்டும். ஆதரவற்ற குழந்தைகள், குழந்தைத் தொழிலாளர்கள், போதைப் பொருள்கள் பயன்படுத்தும் குழந்தைகளை மீட்டெடுத்து அவர்களின் எதிர்கால வாழ்க்கை சிறக்க வழிவகை செய்ய வேண்டும் என்றார்.
    முன்னதாக, மக்கள் கூடும் பொது இடங்களில் வைப்பதற்காக குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் உதவி எண்கள் குறித்த விழிப்புணர்வு பதாகையை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட நீதிபதி ஆகியோர் வெளியிட்டனர்.
    கூட்டத்தில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் செல்வராசு, காவல் துணைக் கண்காணிப்பாளர் (மாவட்ட குற்ற ஆவண காப்பகம்) முஹமது பலுலுல்லாஹ், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் ராஜம் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai