Enable Javscript for better performance
கோவாவில் இறந்தவர் உடல் சொந்த ஊர் கொண்டுவரப்பட்டு அஞ்சலி- Dinamani

சுடச்சுட

    

    கோவாவில் இறந்தவர் உடல் சொந்த ஊர் கொண்டுவரப்பட்டு அஞ்சலி

    By DIN  |   Published on : 07th April 2018 01:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவாவில் இறந்தவர் உடல் சொந்த ஊரான கூத்தாநல்லூருக்கு வெள்ளிக்கிழமை கொண்டுவரப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.
    திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் நகர காங்கிரஸ் தலைவர் சாம்பசிவத்தின் மூத்த மகன் பாலாஜி (40). இவர் தென்னக ரயில்வேயில் சேலம் கோட்டத்தில் பணியாற்றி வந்தார். இந்த நிலையில், தனது மனைவியை சென்னையில் உள்ள மாமனார் வீட்டில் விட்டு விட்டு கடந்த வாரம், நண்பர்களுடன் கோவாவுக்கு சுற்றுலா சென்றார். அங்கு அவருக்கு மாரடைப்பு  ஏற்பட்டு, அரசு மருத்துவமனையில் கடந்த 4-ஆம் தேதி உயிரிழந்தார்.
    இத்தகவல் கூத்தாநல்லூர் மேல்கொண்டாழியில் உள்ள தந்தை சாம்பசிவத்துக்கு தெரிவிக்கப்பட்டது. மேலும், பாலாஜியின் உடலைப் பிரேத பரிசோதனை செய்வதற்கு அவரது ரத்தம் சம்பந்தப்பட்ட உறவினர்கள் கையெழுத்திட வேண்டுமென மருத்துவமனைத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
    இதையறிந்த கூத்தாநல்லூர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகரச் செயலாளர் எம். சுதர்ஸன், நாகை நாடாளுமன்ற  முன்னாள் உறுப்பினர்  எம். செல்வராசுவிடம் தெரிவித்தார். 
    அவர் மூலம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான டி. ராஜாவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
    இதைத்தொடர்ந்து, அவர் கோவா ஏ.ஐ.டி.யூ.சி. மாநிலத் தலைவர் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்  மாநிலச் செயலாளருக்கு தெரிவித்தார். அம்மாநில நிர்வாகிகள் மூலம், கோவாவின் பவனி என்ற பகுதியில் உள்ள மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது.
    அதன்பின்னர், பாலாஜியின் உடல் சாலை மார்க்கமாக தனி வாகனத்தின் மூலம் சுமார் 30 மணிநேர பயணத்துக்குப் பின்னர் வெள்ளிக்கிழமை மதியம் கூத்தாநல்லூர் கொண்டுவரப்பட்டது. அவரது உடலுக்கு மன்னார்குடி நகர்மன்ற முன்னாள் தலைவர் சிவா. ராஜமாணிக்கம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள்  மாவட்டச் செயலாளர் வை. செல்வராஜ், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் எஸ்.எம்.பி. துரைவேலன், திமுக நகரச் செயலாளர் எஸ்.எம். காதர்உசேன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai