Enable Javscript for better performance
கூட்டுப்பண்ணையத் திட்டத்தில்மானியத்துடன் கூடிய உழவு இயந்திரங்கள்: அமைச்சர் வழங்கினார்- Dinamani

சுடச்சுட

    

    கூட்டுப்பண்ணையத் திட்டத்தில்மானியத்துடன் கூடிய உழவு இயந்திரங்கள்: அமைச்சர் வழங்கினார்

    By DIN  |   Published on : 08th April 2018 01:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவாரூரில் கூட்டுப்பண்ணையத் திட்டத்தின் கீழ் 36 உற்பத்தியாளர் குழுக்களுக்கு ரூ.1 கோடியே 80 லட்சம் மதிப்புள்ள மானியத்துடன் கூடிய உழவு இயந்திரங்களை தமிழக உணவுத் துறை அமைச்சர் ஆர். காமராஜ் சனிக்கிழமை வழங்கினார்.
    திருவாரூர் வட்டம், வேளாண்மைத் துறை இணை இயக்குநர் அலுவலக வளாகத்தில் கூட்டுப்பண்ணையத் திட்டத்தின் கீழ் விவசாயிகள் அடங்கிய உற்பத்தியாளர் குழுக்களுக்கு வேளாண் உழவு இயந்திரங்கள் வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
    நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் தமிழக உணவுத்துறை அமைச்சர் ஆர். காமராஜ் பங்கேற்று, உழவு இயந்திரங்களை வழங்கிப் பேசியது:
    காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை பல்வேறு சட்டப் போராட்டம் நடத்தி, மத்திய அரசிதழில் வெளியிட வைத்த தமிழக அரசு, தற்போது காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுத்து வருகிறது.
    தற்போது தமிழக அரசானது, விவசாயிகளுக்காக கூட்டுப்பண்ணையம் என்ற உன்னத திட்டத்தை செயல்படுத்தி உள்ளது.அதன்படி சிறுகுறு விவசாயிகளை 20 நபர் கொண்ட ஆர்வலர் குழுவாகவும், 5 ஆர்வலர் குழுக்களை இணைத்து 100 நபர் கொண்ட குழுவாகவும் இணைத்து சாகுபடி செய்யும் திட்டமாக இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் 100 விவசாயிகள் கொண்ட ஒவ்வொரு உற்பத்தியாளர் குழுவும், ஒரு பருவத்தில், ஒரு பயிரில் ஒரே ரகத்தை அதிக பரப்பில் சாகுபடி செய்வதும், திட்டமிட்டு இடுபொருட்கள் வாங்குவதிலிருந்து மதிப்புக்கூட்டி விற்பனை செய்வது வரை கூட்டாக செயல்படுவர். அத்துடன் உயரிய தொழில் நுட்பங்களை ஒரு சேர கடைபிடித்து நிதி உதவியையும் உடனுக்குடன் பெற்று, மதிப்புக்கூட்டி விற்பனை செய்வதற்கான முயற்சிகளை உற்பத்தியாளர் குழுக்கள் மேற்கொள்ளுவதால் குறைந்த முதலீட்டில் அதிக வருவாய் ஈட்ட முடியும்.
    இத்திட்டத்தின் கீழ் 2017-18 ஆம் ஆண்டில் திருவாரூர் மாவட்டத்தில் 36 உற்பத்தியாளர் குழுக்கள் ஆரம்பிக்கப்பட்டு இதில் 3600 விவசாயிகள் நேரடியாக பயன் பெற்று வருகின்றனர்.
    தற்போது ஒரு குழுவிற்கு தலா ரூ.5 லட்சம் வீதம் 36 குழுக்களுக்கு ரூ.1 கோடியே 80 லட்சம் நிதி மதிப்புள்ள மானியத்துடன் கூடிய 24 டிராக்டர்கள், 38 பவர்டில்லர்கள், 2 வைக்கோல் கட்டும் கருவிகள் வழங்கப்பட்டுள்ளது. இவ்வேளாண் இயந்திரங்களை விவசாய பெருங்குடி மக்கள் நல்ல முறையில் பயன்படுத்தி அதிக மகசூல் பெற வேண்டும் என்றார். ன மாண்புமிகு உணவுத்துறை அமைச்சர் திரு.இரா.காமராஜ் அவர்கள் தெரிவித்தார்.
    நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் க.சக்திமணி, வேளாண்மைத்துறை இணை இயக்குநர் சங்கரன், வருவாய் கோட்டாட்சியர் முத்துமீனாட்சி, துணை இயக்குநர்கள் சிவக்குமார், கல்யாணசுந்தரம், திருவாரூர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையின் தலைவர் கலியபெருமாள், மாங்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் மணிகண்டன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai