Enable Javscript for better performance
பள்ளி செல்லா, இடைநின்ற குழந்தைகள் கணக்கெடுக்கும் பணி: ஏப்.19-இல் தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    பள்ளி செல்லா, இடைநின்ற குழந்தைகள் கணக்கெடுக்கும் பணி: ஏப்.19-இல் தொடக்கம்

    By DIN  |   Published on : 08th April 2018 01:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பள்ளி செல்லா, இடை நின்ற மற்றும் மாற்றுத் திறனுடைய குழந்தைகளைக் கண்டறியும் கணக்கெடுப்புப் பணி ஏப்.19 -இல் தொடங்கி மே 31-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது என, திருவாரூர் மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ் தெரிவித்தார்.
    திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் 2018-19 ஆம் ஆண்டு பள்ளிசெல்லா, இடைநின்ற மற்றும் மாற்றுத் திறனுடைய குழந்தைகள் கணக்கெடுப்பு பணிகள் குறித்து அனைத்துத் துறை அலுவலர்களுடனான ஒருங்கிணைப்புக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
    கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ் தலைமை வகித்துப் பேசியது:
    இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டப்படி, 6 முதல் 14 வயதுடைய அனைத்து குழந்தைகளையும் முறையான பள்ளியில் சேர்த்து, கல்வி கற்க வழிவகை செய்து தொடக்கக் கல்வியை முடிக்க செய்வது அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் நோக்கம். 6 முதல் 14 வயதுடைய
    பள்ளி செல்லா குழந்தைகளையும், மாற்றுத் திறனுடைய குழந்தைகளையும் கண்டறிய ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் கணக்கெடுப்பு பணி நடத்தப்படுகிறது.
    நிகழாண்டுக்கான கணக்கெடுப்பு பணி ஏப்ரல் 19 முதல் மே 31-ஆம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, அலுவலர்கள் கணக்கெடுப்புப் பணியைத் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.
    மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர்கள் கணக்கெடுப்புப் பணி மேற்கொள்ளும் போது ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள் எப்பகுதியில் அதிகம் காணப்படுகின்றனர் என்பதை கண்டறிந்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
    மேலும், அனைவருக்கும் கல்வி இயக்க கணக்கெடுப்பின் போது கண்டறியப்பட்ட மாற்றத் திறன் குழந்தைகளுக்கான தேசிய அடையாள அட்டை, உதவித் தொகை மற்றும் உதவி உபகரணங்கள் வழங்க வேண்டும். பள்ளி செல்லா இடைநின்ற மற்றும் மாற்றுத் திறனுடைய குழந்தைகளுக்காக 10 ஒன்றியங்களிலும், சிறப்பு பயிற்சி மையங்கள் செயல்படுகின்றன.
    இந்த மையங்கள், பள்ளி ஆயத்தப் பயிற்சி மையங்களில் பயிலும் குழந்தைகளுக்கு அரசு வழங்கும் சத்துணவு மற்றும் முட்டைகள் வழங்கப்பட்டு வருகிறது.
    கணக்கெடுப்பில் கண்டறியப்பட்ட குழந்தைகள் விவரங்களை தேசிய தகவல் மையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு, தொடர் கண்காணிப்பில் வைத்து கொள்ள வேண்டும் என்றார்.
    கூட்டத்தில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தனமணி, மாவட்ட கல்வி அலுவலர் சரோஜா, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் விஜயா, உதவித் திட்ட அலுவலர் சங்கரநாராயணன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai