Enable Javscript for better performance
அதிமுக - அமமுகவினர் மோதல்: ஒருவருக்கு அரிவாள் வெட்டு- Dinamani

சுடச்சுட

    

    திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் அதிமுக - அமமுகவினர் இடையே சனிக்கிழமை நள்ளிரவில் ஏற்பட்ட மோதலில் இரண்டு வீடுகள் சேதமடைந்ததுடன், அதிமுக நிர்வாகிக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதுதொடர்பாக, அமமுக மாவட்ட நிர்வாகி ஒருவர் கைது செய்யப்பட்டார்.
    மன்னார்குடி பகுதியில் அதிமுகவினருக்கும், அமமுக வினருக்கும் கட்சிக் கொடியேற்றுவது, விளம்பரப் பதாகை வைப்பது தொடர்பாக தொடர்ந்து மோதல்போக்கு இருந்து வருவதுடன், இதுதொடர்பாக அமமுக நிர்வாகிகள் மீது புகார் அளிக்கப்பட்டு கைது நடவடிக்கைகளும் இருந்து வந்தது. இதைத்தொடர்ந்து, கூட்டுறவு சங்கத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கலின்போதும், மனு பரிசீலனையின்போதும், இரு கட்சியினர் இடையே தகராறு ஏற்பட்டது.
    இந்நிலையில், அமமுக 13 வார்டு செயலர் பிரகாஷ் வீட்டின் அருகே டிடிவி. தினகரனை வாழ்த்தி கட்சி விளம்பரப் பதாகை வைத்திருந்தாராம். சனிக்கிழமை நள்ளிரவு பிரகாஷின் வீட்டருகே வந்த அதிமுகவினர் சிலர், அந்த விளம்பரப் பதாகையையும், பிரகாஷின் வீட்டையும் தாக்கி சேதப்படுத்தினராம்.
    இதுபற்றி தகவலறிந்து, பிரகாஷ் வீட்டுக்கு திரண்டு வந்த அமமுகவினருக்கும், அதிமுகவினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது, இரு தரப்பினரும் ஒருவரையொருவர் உருட்டுக் கட்டையால் தாக்கிக்கொண்டனர். இதில் அதிமுக 13 -ஆவது வட்டச் செயலர் ப. மதனகோபாலுக்கு (37), அரிவாள் வெட்டு விழுந்தது. இதையடுத்து, அவர்  சிகிச்சைக்காக  மன்னார்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
    இதைத்தொடர்ந்து, அனுமார் கோயில் சந்தில் உள்ள அதிமுக பிரமுகர் விக்னேஷின் வீட்டை, அமமுகவினர் தாக்கி சேதப்படுத்தினராம்.
    தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மன்னார்குடி போலீஸார், தகராறில் ஈடுபட்ட இரு கட்சியினரையும் விரட்டி அடித்தனர். அப்போது அங்கு நின்றுகொண்டிருந்த அமமுக மாவட்ட துணைச் செயலர் ஆர். சரவணச்செல்வனை கைது செய்து அழைத்துச் சென்றனர்.
    மன்னார்குடி காவல் நிலையத்தில் மதனகோபால்,பிரகாஷ் ஆகியோர் தனித்தனியே புகார் அளித்தனர். இதில் மதனகோபால் அளித்த புகாரில், அமமுக நகரச் செயலர் ஆ. ஆனந்தராஜ், ஆர். சரவணச்செல்வன் உள்ளிட்ட 10 பேர் மீதும், பிரகாஷ் அளித்த புகாரில், அதிமுக நிர்வாகி மதனகோபால் உள்ளிட்ட 14 மீதும் புகார் அளிக்கப்பட்டது. போலீஸார் மேல் விசாரணை செய்து வருவதுடன், புகாரில் தொடர்புடையவர்களைத் தேடி வருகின்றனர்.
    அமைச்சர் ஆறுதல்:
    இந்நிலையில், அரிவாளால் வெட்டப்பட்டு, மன்னார்குடி அரசு மருத்துவமனையில் சிசிச்சைப் பெற்று வரும் அதிமுக நிர்வாகி மதனகோபாலை தமிழக உணவுத்துறை அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலருமான ஆர். காமராஜ் ஞாயிற்றுக்கிழமை சந்தித்து ஆறுதல் கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai