"மேல்முறையீடு இல்லாத, இறுதியான சுமுக தீர்வு சமரச மையத்தில் கிடைக்கும்'
By DIN | Published on : 10th April 2018 10:26 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
சமரச மையத்தில் மேல் முறையீடு இல்லாமலும், இறுதியான சுமுக தீர்வு கிடைக்கும் என்றார் திருவாரூர் மாவட்ட நீதிபதி ஆர். கலைமதி.
திருவாரூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சமரச மையத்தை திங்கள்கிழமை திறந்து வைத்து மேலும் அவர் பேசியது:
உச்ச நீதிமன்ற நீதிபதியின் உத்தரவுப்படி தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் நீதிமன்ற வளாகத்தில் சமரச மையம் தொடங்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் வழக்குகள், காலவிரயமின்றி பொருள்செலவின்றி விரைவாக தீர்வு கிடைக்கிறது. இந்த சமரச மையத்துக்காக நன்கு பயிற்சி பெற்ற இரண்டு சமரசர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வழக்குத் தொடுத்தவர்கள் இருவரும் முழு சம்மதத்துடன் அவரவர்களுக்கு ஒரு சமரசர்களை நியமித்துக்கொண்டு சரியான பேச்சு வார்த்தை மூலம் தீர்வு பெறலாம்.
வழக்குத் தொடுத்தவர்கள் நீதிமன்றத்தில் நேரடியாகவோ அல்லது வழக்குரைஞர் மூலமாகவோ ஆஜராகும்போது வழக்கை சமரச மையத்துக்கு அனுப்பலாம். சமரச மையத்தில் நடைபெறும் அனைத்து பேச்சுவார்த்தைகளும் ரகசியம் காக்கப்படும். சமரசத்துக்கு வரும் வழக்குகளில் எவ்வித மேல்முறையீடு இல்லாமலும், விரைவாகவும், இறுதியான சுமுக தீர்வை கட்டணம் ஏதுமின்றி பெறலாம். எனவே, பொதுமக்கள், வியாபாரம் சார்ந்த கூட்டமைப்புகள், நீண்ட நாள்களாக விவாகரத்து வழக்கு நடத்தி வருபவர்கள் இந்த சமரச மையத்தை பயன்படுத்தி பயன்பெறலாம் என்றார் நீதிபதி ஆர். கலைமதி.
நிகழ்ச்சியில், கூடுதல் மாவட்ட நீதிபதி எஸ். பக்கிரிசாமி, தலைமை குற்றவியல் நீதிபதி எம். ராஜேந்திரன், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு சார்பு நீதிபதி எஸ். கோவிந்தராஜன், மாவட்ட உரிமையியல் நீதிபதி கோகுலகிருஷ்ணன், மாவட்ட குற்றவியல் நடுவர் பி. குமார், மாவட்ட வருவாய் அலுவலர் க. சக்திமணி, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஜான்ஜோசப் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.