Enable Javscript for better performance
காவிரி விவகாரம்: காப்பீட்டுக்கழக ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    காவிரி விவகாரம்: காப்பீட்டுக்கழக ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்

    By DIN  |   Published on : 12th April 2018 07:03 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி, தஞ்சை கோட்ட காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கம் சார்பில் மன்னார்குடியில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    மேலராஜவீதி தந்தை பெரியார் சிலை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் தஞ்சை கோட்டத் தலைவர் ஆர்.புண்ணியமூர்த்தி தலைமை பேசியது: தமிழ்நாட்டின் ஜீவாதாரப் பிரச்னையில் மத்திய அரசுடன் இணைந்து உச்ச நீதிமன்றமும் வஞ்சிக்கிறது என்ற கருத்து மக்களிடம் ஏற்பட்டுள்ளதால்தான் இன்று அவர்கள் தன்னெழுச்சியாக போராட்டக் களத்தில் இறங்கியுள்ளனர். ஆறு வாரக் காலம் அளித்த அவகாசத்தில் மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசு மீது நடவடிக்கை எடுக்காமல் மேலும், கால நீட்டிப்பு வழங்கியிருப்பதன் மூலம் தமிழ்நாட்டின் உரிமையையை நீதிமன்றம் புறக்கணித்திருப்பதாக அறிய முடிகிறது என்றார் அவர். 
    போராட்டதை ஆதரித்து, தமிழ்நாடு காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்கப் பொதுச் செயலர் காவிரி எஸ். ரெங்கநாதன் பேசியது: மத்திய அரசை உச்ச நீதிமன்றம் கடுமையாக எச்சரித்து, மே.3-ஆம் தேதிக்குள் வரைவு செயல் திட்டத்தை உருவாக்கி தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பித்திருக்கிறது. இது சற்று நம்பிக்கையை அளிக்கிறது. இவை அனைத்தும் முறையாக நடைபெற்று நல்ல முடிவு எட்டப்பட்டால், டெல்டா விவசாயிகள் குறுவை சாகுபடியை நம்பிக்கையுடன் தொடங்குவார்கள். விவசாயிகள் பிரச்னை என்று இருந்துவிடாமல் அனைத்து அரசுத் துறைகளின் சார்பில் போராட்டங்கள் நடைபெறுவது, காவிரியில் தமிழகத்தின் உரிமை நிலைநாட்டப்படும் என நம்பிக்கையை அளிக்கிறது என்றார் அவர். 
    சிறப்பு அழைப்பாளராக தீக்கதிர் ஆசிரியர் மதுக்கூர் ராமலிங்கம் பங்கேற்றார். ஆர்ப்பாட்டத்தில், முகவர் சங்க நிர்வாகி சுந்தர ராஜகோபால், வளர்ச்சி அலுவலர்கள் சங்க நிர்வாகி வீரையன், முதுநிலை அலுவலர்கள் சங்க நிர்வாகி கார்த்திக் பாலாஜி, காப்பீட்டுக்கழக ஊழியர் சங்க கோட்ட பொதுச் செயலர் செல்வராஜ் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai