Enable Javscript for better performance
நகராட்சியைக் கண்டித்து சில்லறை மீன் வியாபாரிகள் உண்ணாவிரதம்- Dinamani

சுடச்சுட

    

    நகராட்சியைக் கண்டித்து சில்லறை மீன் வியாபாரிகள் உண்ணாவிரதம்

    By DIN  |   Published on : 12th April 2018 07:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சாலையோர மீன் வியாபாரத்துக்கு தடை விதித்துள்ள நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து, மன்னார்குடியில் சில்லறை மீன் வியாபாரிகள் சங்கம் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
    மன்னார்குடி நகராட்சிக்குள்பட்ட காலவாய்க்கரை, மேலப்பாலம், கீழப்பாலம், வ.உ.சி. சாலை பகுதிகளில் நிரந்தர சில்லறை மீன் கடைகளும், ஞாயிற்றுக்கிழமையில் ஒரு சில இடங்களில் தற்காலிகமான சாலையோர சில்லறை விற்பனை மீன் கடைகளும், மிதிவண்டி, இருசக்கர வாகனம் மூலம் கொண்டு சென்று மீன் வியாபாரம் நீண்ட காலமாக நடைபெற்று வந்ததது. இந்நிலையில், அண்மையில் நகராட்சியின் சார்பில் தாமரைக்குளம் பகுதியில் ஒருங்கிணைந்த மீன் விற்பனை அங்காடி திறந்த பிறகு, நகரில் வேறு எங்கும் மீன் கடைகளை வைக்கக் கூடாது என நகராட்சி நிர்வாகம் தடை விதித்திருப்பதுடன், மீன் அங்காடியில் மட்டும் கடை வாடகைக்கு எடுத்து வியாபாரம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டது. நகராட்சியின் இந்த உத்தரவினால் தொலை தூரப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாகவும், இதனால் சில்லறை மீன் வியாபாரிகள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். 
    இந்நிலையில், நகராட்சியின் இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் சில்லறை மீன் வியாபாரிகள் சங்கம் சார்பில் நடைபெற்ற உண்ணாவிரதத்தை, வணிகர் நலச் சங்க மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர் பாஸ்கர் தொடங்கி வைத்தார். இதில், மதிமுக மாவட்ட பிரதிநிதி கோவி. மீனாட்சிசுந்தரம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நகரச் செயலர் எஸ். ஆறுமுகம், காங்கிரஸ் கட்சி நகரத் தலைவர் ஆர். கனகவேல், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் மாலா பாண்டியன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாநில நிர்வாகி ரா. ரமணி உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்து பேசினர். தமிழர் தேசிய முன்னணி மாவட்டச் செயலர் மருத்துவர் பாரதிச்செல்வன் உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai