Enable Javscript for better performance
நீடாமங்கலத்தில் ரயிலை கவிழ்க்க சதியா ?- Dinamani

சுடச்சுட

    

    நீடாமங்கலத்தில் தண்டவாள இணைப்புப் பகுதியில் 4 இடங்களில் ஜல்லிகற்கள் வைத்து ரயிலை கவிழ்க்க சதித் திட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்டது. 
    நீடாமங்கலம் ரயில் நிலையத்திலிருந்து கிழக்கே சற்று தொலைவில், நீடாமங்கலம்-திருவாரூர் இருப்புப் பாதையில் பாயிண்ட் பகுதியிலும், இதேபோல், ரயில் நிலையத்தின் மேற்கே நீடாமங்கலம் - தஞ்சாவூர் இருப்புப் பாதையில் பாயிண்ட் பகுதியில் 4 இடங்களில் தண்டவாள இணைப்புப் பகுதியில் ஜல்லிகற்கள் வைக்கப்பட்டிருந்ததால் வியாழக்கிழமை மாலை முதல் காரைக்கால் - திருச்சி பயணிகள் ரயில், இரவு திருப்பதியிலிருந்து மன்னார்குடி செல்லும் விரைவு ரயிலுக்கு சிக்னல் கிடைக்காமல் போனது. எனினும், மாற்றுத் தண்டவாளம் வழியாக சிக்னல் கிடைத்த பகுதியில் ரயில் இயக்கப்பட்டது. ரயில்வே ஊழியர்கள் சம்பந்தப்பட்ட பகுதிக்குச் சென்று தண்டவாள இணைப்புப் பகுதியில் வைக்கப்பட்டிருந்த ஜல்லிக் கற்களை அப்புறப்படுத்தினர்.
    தண்டவாளத்தில் கற்களை வைத்து ரயிலை கவிழ்க்க ஏதும் சதித்திட்டம் நடந்துள்ளதா என்ற சந்தேகத்தின் அடிப்படையில் ரயில் நிலைய அதிகாரிகள் உடனடியாக திருச்சி கோட்ட அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தனர். 
    இதையடுத்து, திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் உத்தரவுப்படி, மன்னார்குடி டிஎஸ்பி. அசோகன் தலைமையிலான போலீஸார் ஜல்லி கற்கள் வைக்கப்பட்ட இடங்களை ஆய்வு செய்தனர். தொடர்ந்து, போலீஸார் அப்பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதேபோல் நீடாமங்கலம் பகுதியில் ஏற்கெனவே பல முறை ஜல்லி கற்கள் வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து க்யூ பிரிவு போலீஸார், ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸார் கண்காணிப்புப் பணிகளை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுத்தனர். சம்பந்தப்பட்ட பகுதிகளில் கண்காணிப்புக் கேமராக்களும் பொருத்தப்பட்டன. இந்நிலையில், தற்போது மீண்டும் தண்டவாள இணைப்புப் பகுதியில் ஜல்லிகற்கள் வைக்கப்பட்டுள்ள சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai