Enable Javscript for better performance
நீடாமங்கலத்தில் ரயில் தண்டவாள இணைப்பில் ஜல்லிக்கற்கள்: உளவுப்பிரிவு போலீஸார் தீவிர விசாரணை- Dinamani

சுடச்சுட

    

    நீடாமங்கலத்தில் ரயில் தண்டவாள இணைப்பில் ஜல்லிக்கற்கள்: உளவுப்பிரிவு போலீஸார் தீவிர விசாரணை

    By DIN  |   Published on : 14th April 2018 12:39 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலத்தில் தண்டவாள இணைப்புப் பகுதியில் 4 இடங்களில் ஜல்லிக்கற்கள் வைத்து ரயிலை கவிழ்க்க சதி நடைபெற்றதையடுத்து, உளவுப்பிரிவு போலீஸார் தீவிர கண்காணிப்புப் பணியில் வெள்ளிக்கிழமை  ஈடுபட்டனர்.
    நீடாமங்கலம் ரயில் நிலையத்திலிருந்து கிழக்கே சற்று தொலைவில் நீடாமங்கலம்- திருவாரூர் இருப்புப்பாதையில் பாயிண்ட் எண் - 52 ஏ, 52 பி, 50 பி மற்றும் நீடாமங்கலம் ரயில் நிலையத்திலிருந்து மேற்கே அதாவது நீடாமங்கலம்- தஞ்சாவூர் இருப்புப்  பாதையில் பாயிண்ட் எண்- 63 ஆகிய இடங்களில் தண்டவாள இணைப்புப் பகுதியில் ஜல்லிக்கற்கள் வைக்கப்பட்டதால், வியாழக்கிழமை மாலை முதல் காரைக்கால் - திருச்சி பயணிகள் ரயில், திருப்பதியிலிருந்து மன்னார்குடி செல்லும் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு சிக்னல் கிடைக்காமல் போனது. எனினும், மாற்று தண்டவாளம் வழியாக சிக்னல் கிடைத்த பகுதியில் ரயில்கள் இயக்கப்பட்டன. ரயில்வே ஊழியர்கள் சம்பந்தப்பட்ட பகுதிகளுக்குச் சென்று தண்டவாள இணைப்புப் பகுதியில் வைக்கப்பட்டிருந்த ஜல்லிக்கற்களை அப்புறப்படுத்தினர்.
    ரயிலை கவிழ்க்க சதியா? இதன்மூலம் ரயிலை கவிழ்க்க சதி நடந்திருக்குமோ என்ற சந்தேகத்தின் அடிப்படையில், திருச்சி கோட்ட அலுவலகத்துக்கு அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.
    இதைத்தொடர்ந்து, திருவாரூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் உத்தரவின் பேரில், மன்னார்குடி டிஎஸ்பி அசோகன் மற்றும் நீடாமங்கலம் போலீஸார், உளவுத்துறையினர், நீடாமங்கலம் வட்டாட்சியர் குணசீலி, வருவாய்த்துறை ஊழியர்கள் நீடாமங்கலம் ரயில் நிலையப் பகுதிகளில் வியாழக்கிழமை  இரவு ஆய்வு செய்தனர்.
    போலீஸார் கண்காணிப்பு: இந்த நிலையில், சந்தேகப்படும் வகையிலான பழைய குற்றவாளிகளை போலீஸார் விடிய, விடிய கண்காணித்தனர். அத்துடன் ரயில்வே பாதுகாப்புப் படையினரும் வெள்ளிக்கிழமை தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர்.  உளவுத்துறையினரும் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கெனவே, நீடாமங்கலம் ரயில் நிலைய தண்டவாள இணைப்புப் பகுதியில் ஜல்லிக் கற்கள் வைக்கப்பட்ட சம்பவம் நடைபெற்றிருக்கிறது. ஆகையால், சம்பந்தப்பட்ட பகுதிகளில் கண்காணிப்புக் கேமராக்களும் பொருத்தப்பட்டிருக்கின்றன.
    விழிப்புணர்வு முகாம்: நீடாமங்கலத்தில் விழிப்புணர்வு முகாம் நடத்தி, ரயில் கவிழ்ப்புச் சம்பவம் நிகழ்ந்தால் ஏற்படும் உயிர்ச்சேதம், அரசுக்கு ஏற்படும் இழப்பீடு, குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவோருக்கு கிடைக்கும் தண்டனை குறித்து பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்களிடையே போலீஸார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்தச் சூழலில், மீண்டும் தண்டவாள இணைப்புப் பகுதியில் ஜல்லிக்கற்கள் வைக்கப்பட்டது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai