Enable Javscript for better performance
அம்பேத்கர் பிறந்த தினம்: சமூக நீதி நாள் விழிப்புணர்வு பேரணி- Dinamani

சுடச்சுட

    

    அம்பேத்கர் பிறந்த தினம்: சமூக நீதி நாள் விழிப்புணர்வு பேரணி

    By DIN  |   Published on : 15th April 2018 01:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் 127-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு திருவாரூரில் கிராம சுயாட்சி இயக்கத் திட்டத்தின் சார்பில் சனிக்கிழமை நடைபெற்ற சமூக நீதி நாள் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல் ராஜ் தொடங்கி  வைத்தார்.
    இதையொட்டி நடைபெற்ற விழிப்புணர்வுக் கூட்டத்தில் 20 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கி ஆட்சியர் பேசியது:
    சமூக நீதி நாள் கொண்டாடப்படுவதன் நோக்கம், மனிதனுக்கு மனிதன் சரிசமமாகப் பழக வேண்டும், ஜாதி, மத பேதமின்றி வேற்றுமையின்றி ஒருவரை ஒருவர் மதித்துப் பழக வேண்டும் என்பதே.
    மத்திய அரசின் கிராம சுயாட்சி இயக்கத் திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமங்களுக்கு எரிவாயு இணைப்புகள்,  எல்.இ.டி. மின்விளக்குகள், மின் இணைப்பு இல்லாத குடியிருப்பு வீடுகளுக்கு மின் இணைப்பு,  மருத்துவக் காப்பீடு,  விபத்து காப்பீடு, வங்கி கணக்கு இல்லாதவர்களுக்கு வங்கி கணக்கு, கருவுற்ற தாய் மற்றும் குழந்தைகளுக்கு தடுப்பூசி போன்ற அனைத்து மக்கள் நலப்பணிகளும் இத்திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட உள்ளன. இத்திட்டத்திற்கான முதற்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
    மேலும், கிராம சுயாட்சி இயக்கத் திட்டம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஏப்.14 முதல் மே 5 வரை  பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன் முதல் நிகழ்வு  இந்த சமூக நீதி நாள் விழிப்புணர்வு கூட்டம் ஆகும். பொதுமக்கள் மத்திய, மாநில அரசின் நலத் திட்டங்கள் குறித்து முழுமையாக அறிந்து கொள்ள வேண்டும்.  அதை மற்றவர்களுக்கு எடுத்துக் கூறுவதன் மூலம் அனைத்து தரப்பு மக்களும்  அரசின் மக்கள் நலத் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு பெறுவார்கள் என்றார்.
    தொடர்ந்து, 20 பேருக்கு ஜாதிச் சான்றிதழ்களை அவர் வழங்கினார்.
     கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் க. சக்திமணி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் தெய்வநாயகி,  வருவாய்க் கோட்டாட்சியர்  முத்துமீனாட்சி, செயற்பொறியாளர் செல்வராஜ், வட்டாட்சியர் ராஜன்பாபு மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai