விபத்தில் பாதிக்கப்படும் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு இழப்பீடு வழங்கக் கோரிக்கை
By DIN | Published on : 16th April 2018 01:59 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு பணியின்போது விபத்து ஏற்பட்டால், அதற்கான மருத்துவச் செலவு மற்றும் இழப்பீட்டை அரசு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருவாரூரில் ஏ.ஐ.டி.யு.சி. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக, சுமைதூக்கும் தொழிலாளர் சங்கத்தின் 32 -ஆவது ஆண்டுப் பேரவை கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு சங்க மாநிலத் தலைவர் அ. சாமிக்கண்ணு தலைமை வகித்தார். ஏ.ஐ.டி.யு.சி மாநில துணைத் தலைவரும், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினருமான எம். செல்வராசு கூட்டத்தை தொடங்கி வைத்துப் பேசினார்.
இதில் தொழிலாளர் சங்க மாநில துணைத் தலைவர்கள் என். சந்தானம், ஜெ. குணசேகரன், மாநிலப் பொதுச் செயலர் என். புண்ணீஸ்வரன், மாநிலப் பொருளாளர் தி. கோவிந்தராஜன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருவாரூர் மாவட்டச் செயலர் வை. சிவபுண்ணியம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் 30 தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 ஆயிரம் வீதம் ரூ. 3 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது.
தீர்மானங்கள்: அனைத்து விவசாய விளைப்பொருள்களை அரசு கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று உளுந்து, பயிறு, பருப்பு வகைகளையும் கொள்முதல் செய்ய உத்தரவிட்ட தமிழக அரசுக்கு பாராட்டுத் தெரிவிப்பது.
உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவது, சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு பணியின் போது விபத்து ஏற்பட்டால் அதற்கான மருத்துவச் செலவு மற்றும் இழப்பீட்டை அரசே வழங்கக் கோருவது, சுமை தூக்கும் தொழிலாளர் அனைவருக்கும் அடையாள அட்டை வழங்கக் கோருவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.