ஏப்.28-இல் ஆலங்குடி ஆபத்சகாயேசுவரர் கோயில் தேரோட்டம்

ஆலங்குடி ஆபத்சகாயேசுவரர் கோயில் சித்திரைத் தேரோட்ட விழாவுக்கான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க சம்பந்தப்பட்ட

ஆலங்குடி ஆபத்சகாயேசுவரர் கோயில் சித்திரைத் தேரோட்ட விழாவுக்கான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க சம்பந்தப்பட்ட அலுவலர்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார் மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ். 
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை ஆலங்குடி அருள்மிகு ஆபத்சகாயேசுவரர் திருக்கோயில் சித்திரைத் தேரோட்ட விழாவையொட்டி, நடைபெற்ற ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் மேலும் அவர் பேசியது: திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் வட்டம், ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில் சித்திரைத் தேரோட்ட விழா ஏப்.28-இல் நடைபெறவுள்ளது. விழா சிறப்பாக நடைபெற அரசு அலுவலர்கள் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட 
வேண்டும். 
காவல்துறையைப் பொருத்தவரை தேரோட்டம் விரைவாகவும்,  சிறப்பாகவும் நடைபெறும் வகையில் பொதுமக்களையும்,  தேர் இழுக்கும் பணியாளர்களையும் அரவணைத்துச் செல்ல வேண்டும். தீயணைப்புத் துறையினர் தீயணைப்பு வாகனம் ஒன்றை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். மின்வாரிய பணியாளர்கள் கோயிலைச் சுற்றி அமைந்துள்ள நான்கு வீதிகளில் திருத்தேர் வருவதற்கு இடையூறாக உள்ள மின் கம்பிகளை சரிசெய்து கொடுக்க வேண்டும்.
சுகாதாரத் துறை சார்பில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அடங்கிய குழுவை பணியில் ஈடுபடுத்த வேண்டும்.
பொதுமக்களுக்கு தேவையான குடிநீர் வசதி,  தற்காலிக கழிப்பறை வசதி செய்து தரவேண்டும். பொதுப்பணித்துறையினர் தேர்க் கட்டுமானப் பணிகளை அவ்வப்போது பார்வையிட்டு தேரோட்ட தகுதிச் சான்றை தேரோட்டத்துக்கு முன்னதாக வழங்க  வேண்டும் என்றார் நிர்மல்ராஜ். 
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் க. சக்திமணி, துணை ஆட்சியர் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்) மலர்கொடி, கோட்டாட்சியர் இரா. முத்துமீனாட்சி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com