Enable Javscript for better performance
"பழங்கால மக்களின் வாழ்வியலை அறிய அகழ்வாராய்ச்சிகள் உதவும்'- Dinamani

சுடச்சுட

  

  "பழங்கால மக்களின் வாழ்வியலை அறிய அகழ்வாராய்ச்சிகள் உதவும்'

  By DIN  |   Published on : 18th April 2018 06:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பழங்கால மக்களின் வாழ்வியலை அறிந்துகொள்ள அகழ்வாராய்ச்சிகள் உதவுகின்றன என, தொல்லியல் ஆராய்ச்சியாளர் கே. அமர்நாத் ராமகிருஷ்ணா தெரிவித்தார்.
  திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் அண்மையில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சி தொடர்பான கருத்தரங்கில் பங்கேற்று அவர் மேலும் பேசியது: 
  முதன்முறையாக வைகை நதிக்கரையை முழுவதுமாக ஆராய தொல்லியல் துறை களமிறங்கியது.1888, 1976, 1980, 1986, 2006 ஆகிய ஆண்டுகளில் நிகழ்ந்த ஆய்வுகளை அடிப்படையாக வைத்து, ஆய்வுப் பணி தொடங்கப்பட்டது. 
  தொடர்ந்து 2013-14 இல் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் என ஐந்து மாவட்டங்களை முழுவதுமாக ஆய்வு செய்து, வைகை நதிக்கரையைச் சுற்றி இருக்கக்கூடிய 100-க்கும் மேற்பட்ட இடங்களிலிருந்து 3 இடங்கள் முதன்மை ஆய்வுக்குரிய இடங்களாக தேர்வுசெய்யப்பட்டன. இதில் முழு ஆய்வுக்குரிய இடமாய் கீழடி முடிவானது.
  கீழடி ஆய்வு...
  கீழடியைத் தேர்வு செய்ததற்கு காரணம்,  மற்ற இரு இடங்களைக் காட்டிலும் தற்போது இருக்கக் கூடிய மதுரையிலிருந்து மிக அருகில் 12 கி.மீ. தூரத்தில் இருப்பது தான். மொத்தம் 110 ஏக்கர் பரப்பளவில் 4.5 கி.மீ. சுற்றளவில் 2.88 மீட்டர் உயரமுடையை தொல்லியல் மேடு ஆய்விற்குரிய பரப்பாகும்.
  கீழடியை இரண்டு ஆண்டுகள்  ஆய்வு செய்யப்பட்டது. முதல் ஆண்டில் அடிப்படைப் பொருள்கள் மட்டுமே கிடைத்தன. ஆனால், அதற்கடுத்த ஆண்டில் அடிப்படைப் பொருள்களைக் கொண்டு கீழடி ஆய்வு மேற்கொண்டதில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.
  இரண்டாமாண்டு செய்த ஆய்வுகள்தான், இது நகரமாக இருந்திருக்க வேண்டும் என்பதை உறுதி செய்தன. செங்கற்கள் கொண்டு எழுப்பப்பட்ட கட்டடங்களும், கழிவு வாய்க்கால்களும், நீர் செல்லும் குழாய்களும் இருந்திருப்பதற்கான அடிப்படைத் தரவுகள் கிடைத்தன.
  திசன், உத்திரன், ஆதன், அயனன், போன்ற பெயர்கள் பொறித்த  பானை ஓடுகள் கிடைத்தன. இரட்டை அடுக்கு பர்னஸ் கிடைத்தது. முதல் அடுக்கில் உள்ள வெப்பம் இரண்டாவது அடுக்கினால் வெளியே செல்லாமல் பாதுகாப்பாக வைக்க இது பயன்படக்கூடியது. யானை தந்தத்தினால் செய்யப்பட்ட பொருள்கள் கிடைத்துள்ளன. இதனை வைத்து மக்களின் வாழ்வியலை நம்மால் உத்தேசிக்க முடியும். சங்க இலக்கியத்துக்கு முழுமையான ஆதாரங்களை நம்மால் அறிவியல் ரீதியில் கொடுக்க முடியவில்லை. அதற்கான ஆதாரங்களை நாம் அகழ்வாய்வின் மூலமே மீட்க முடியும்.   
  இரண்டாம் கட்ட அகழ்வாய்வின்போது 4000-க்கும் மேற்பட்ட பொருள்கள் அகழ்ந்தெடுக்கப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டன. இன்னும் கார்பன் கணக்கீடு செய்யப்படவில்லை. விரைவில் செய்யப்பட்டு 20 மாதிரிகளின் கார்பன் கணக்கீட்டு முடிவுகள் வந்தால், தமிழர்களின் அறிவியல் தொழில்நுட்பத்தின் வயதைக் கணக்கிட முடியும்.
  வரலாற்று எச்சங்கள் பலவற்றை அழித்துக் கொண்டிருக்கிறோம். இளையதலைமுறை மாணவர்கள் ஆய்வு ரீதியில் அகழ்வாய்வுகளை அடுத்த கட்டம் நோக்கி எடுத்துச் செல்ல வேண்டும் என்றார்.
   நிகழ்ச்சியில் பல்வேறு பல்கலைக்கழகம், கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள், ஆய்வாளர்கள், பேராசிரியர்கள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
  இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தமிழ்த் துறைத் தலைவர் ப. வேல்முருகன், உதவிப் பேராசிரியர்கள் க. ஜவகர், ப. குமார், எஸ். சுபாஸ், ராமேஷ்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai