Enable Javscript for better performance
"திருக்குறளையும், பாரதியார் கவிதையையும் வாசித்தால் வாழ்க்கை வளமாகும்'- Dinamani

சுடச்சுட

  

  "திருக்குறளையும், பாரதியார் கவிதையையும் வாசித்தால் வாழ்க்கை வளமாகும்'

  By DIN  |   Published on : 19th April 2018 01:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ஒவ்வொருவரும் நாள்தோறும் ஒரு முறையாவது திருக்குறளையும், பாரதியாரின் கவிதையையும் வாசித்து வந்தால் வாழ்க்கை வளமாகும் என்றார் பட்டிமன்ற நடுவர் பேராசிரியர் எம். ராமச்சந்திரன்.
  மன்னார்குடி அருகேயுள்ள சுந்தரக்கோட்டை செங்கமலத்தாயார் கல்வி அறக்கட்டளை மகளிர் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கல்லூரி ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மேலும் அவர் பேசியது: பெண்கள் ஞானத்தை விரிவு செய்தால் சமுதாய ஞானம் விரிவாகும். பேச்சு என்பது கலை, அதைவிட சிறந்த கலை பேச்சை ரசிப்பது. அதனால்தான் எந்த கலைக்கும் இல்லாத பேச்சுக் கலையை குறிப்பிடும்போது, நாக்கில் சரஸ்வதி இருக்கிறாள் என உயர்ந்த அம்சத்துடன் குறிப்பிடுகின்றனர். சிறந்த மாணவி என்பதற்கு கல்லூரி வருகை நாள் முழுமையாக இருப்பது சான்றாக இருக்காது. ஆசிரியர்கள் பயிற்றுவிக்கும்போது கவனச்சிதறல் இல்லாமல் உள்வாங்கி, தேர்வு மற்றும் தேவையான நேரத்தில் மிகச் சரியாக பயின்றதை வெளிப்படுத்தும் ஆற்றலை கொண்டுதான் அவரை சிறந்த மாணவியாக தேர்வு செய்ய முடியும். 
  அழகுக்கும், அலங்காரத்துக்கும் உள்ள வித்தியாசத்தை மாணவியர் உணர்ந்து கொள்ள வேண்டும். அறிவு, திறமை, கல்வி இவைதான் அழகு. ஒப்பனையும், அலங்காரமும் நிரந்தரமானது இல்லை. அவை எப்போது வேண்டுமானாலும் கலைந்து போகும். அழகை மெருகூட்டுவதில் அக்கரை செலுத்துவதை விட அறிவை விரிவடைய செய்யவதில் முனைப்புக்காட்ட வேண்டும். கற்றக் கல்விதான் சமுதாயத்தில் உயர்நிலைக்கு கொண்டு செல்லும் என்றார் எம். ராமச்சந்திரன். 
  நிகழ்ச்சியில், சிவகங்கை மாவட்டம், காரைக்குடியைச் சேர்ந்தவர் ஆர். செல்வராஜ். இவர் இளங்கலை பொருளாதாரம் படித்துள்ளார். இரண்டு கால்களும் இல்லாத மாற்றுத்திறனாளியான செல்வராஜ், காரைக்குடியில் நாள்தோறும் பேருந்து நிலையம், கடை வீதிகளில் பொதுமக்களிடம் பிச்சை எடுத்து, அதில் கிடைக்கும் பணத்தைக் கொண்டு, ஏழை, எளிய குடும்பத்து பிள்ளைகள் 26 பேருக்கு கல்வி கற்க உதவி செய்து வருகிறார். அவரின் தன்னலமற்ற பொது சேவையை பாராட்டும் வகையில், போஸ் மக்கள் பணியகம் சார்பில், செல்வராஜூவுக்கு மிஸ்டர் யுனிவர்ஸ் பட்டம் வழங்கி, ரூ. 1 லட்சம் நிதி வழங்கப்பட்டது.
  கல்லூரித் தாளாளர் வி. திவாகரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கல்லூரி முதல்வர் சீ. அமுதா, துணை முதல்வர் கந்தவேல், கல்வியியல் கல்லூரி முதல்வர் டி. அன்புச்செல்வி, போஸ் மக்கள் பணியகத் தலைவரும், கல்லூரி அறக்கட்டளை நிர்வாகக்குழு உறுப்பினருமான டி. ஜெய்ஆனந்த், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத்துறை இயக்குநர் சரவணமுத்து, மாணவியர் மன்றத் தலைவர் ஜெ. தர்ஷ்னா, முன்னாள் எம்எல்ஏ. கு. சீனிவாசன், தரணி மெட்ரிக் பள்ளித் தாளாளர் எஸ். காமராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 


   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai