Enable Javscript for better performance
கல்வெட்டு படியெடுத்த மத்தியப் பல்கலைக்கழக தமிழ்த்துறை மாணவர்கள்- Dinamani

சுடச்சுட

    

    கல்வெட்டு படியெடுத்த மத்தியப் பல்கலைக்கழக தமிழ்த்துறை மாணவர்கள்

    By DIN  |   Published on : 21st April 2018 08:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை மாணவர்கள் கல்வெட்டுகளைப் படியெடுக்கும் பணிகளை அண்மையில் மேற்கொண்டனர்.
    ஆண்டுதோறும் உலக பாரம்பரிய தினம் ஏப். 18 -ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, திருவாரூரில் தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையும், அரசு அருங்காட்சியகமும் இணைந்து உலகப் பாரம்பரிய தினத்தை கொண்டாடின. இதையொட்டி, திருவாரூர் அருகேயுள்ள திருக்கண்ணமங்கை பக்தவத்சலப் பெருமாள் கோயிலுக்குச் சென்ற மாணவர்கள் அங்கு கல்வெட்டுகளைப் 
    படியெடுத்தனர். நிகழ்ச்சியில், அருங்காட்சியகக் காப்பாட்சியர் மருதுபாண்டியர் பங்கேற்று கூறுகையில், திருக்கண்ணமங்கை பக்தவத்சலப் பெருமாள் கோயில் சோழர் காலத்தில் கட்டப்பட்டது. கோயிலின் முன்பு அமைந்துள்ள சித்தரமேழி பெரியநாட்டவர் சிற்பமானது, வேளாண்மைக்குப் பயன்படும் ஏர்க்கலப்பை, கத்தி, பணப்பை இவற்றுடன் அமையப் பெற்றுள்ளது. அதாவது சித்தரமேழி பெரியநாட்டவர் என்பது வேளாண்மை செய்யும் மக்களின் கூட்டமைப்பு என்று இதன்மூலம் அறியலாம். 
    அத்துடன் இக்கோயிலின் கருவறையைச் சுற்றியுள்ள கல்வெட்டுகளில் தமிழ் எழுத்துகளும் கர்நாடக எழுத்துகளும் கலந்து பொறிக்கப்பட்டுள்ளன. மேலும், இக்கோயிலுக்கு திருமலைநாயக்கர் மன்னர் செப்புப் பட்டயம் வழங்கியிருப்பதையும் அறிய முடிகிறது என்றார்.
    இதையடுத்து, மதுரை மாவட்டம், மேலூர் அரசுக் கலைக் கல்லூரி வரலாற்றுத் துறை ஆய்வு மாணவர் ரா. உதயகுமார் பங்கேற்று, கல்வெட்டைப் பாதுகாக்கும் முறை, படியெடுக்கும் முறை, படிக்கும் முறை பற்றி மாணவர்களுக்கு விளக்கமளித்தார். பின்னர், திருக்கண்ணமங்கை பக்தவத்சலப் பெருமாள் கோயிலின் முன்மண்டபத்தில் அமைந்துள்ள நிலைக்கல்லில் இடம்பெற்றுள்ள கல்வெட்டைப் படியெடுக்கும் கருவிகளைக் கொண்டு, பல்கலைக்கழகத் தமிழ்த்துறை மாணவர்கள் கல்வெட்டைப் படியெடுத்தனர். அப்போது கண்டமங்கலத்தைச் சேர்ந்த ஒருவர் இக்கோயிலுக்கு தானம் வழங்கிய செய்தி குறித்து கல்வெட்டில் இருப்பது குறித்து மாணவர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.
    பின்னர், திருவாரூர் தியாகராசர் கோயிலுக்குச் சென்ற மாணவர்கள், அங்கு அமைந்துள்ள அரசு அருங்காட்சியத்தில் தொல்லியல் எச்சங்கள், சிற்பங்கள், பண்டைத் தமிழர்களின் புழங்குப் பொருள்கள் குறித்து கேட்டறிந்தனர்.
    நிகழ்வை தமிழ்த்துறைத் தலைவர் ப. வேல்முருகன் ஒருங்கிணைத்தார். இதில் தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர்கள், முதுநிலைத் தமிழ்த்துறை மாணவ, மாணவியர், முனைவர் பட்ட ஆய்வாளர்கள் பங்கேற்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai