Enable Javscript for better performance
வேளாண் தகவல்கள்: உழவன் செயலியைப் பயன்படுத்தலாம்: ஆட்சியர் தகவல்- Dinamani

சுடச்சுட

    

    வேளாண் தகவல்கள்: உழவன் செயலியைப் பயன்படுத்தலாம்: ஆட்சியர் தகவல்

    By DIN  |   Published on : 21st April 2018 09:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வேளாண் தொடர்பான தகவல்களுக்கு உழவன் செயலியைப் பயன்படுத்தலாம் என திருவாரூர் மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ் தெரிவித்துள்ளார்.
    இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
    தமிழ்நாடு அரசின் வேளாண்மைத்துறையால் 2010 -ஆம் ஆண்டில் விவசாயிகளுக்கு வேளாண் தகவல் சேவை வழங்குவதற்காக w‌w‌w.‌t‌n​a‌g‌r‌i‌s‌n‌e‌t.‌t‌n.‌g‌o‌v.‌i‌n என்ற இணையதளம் தொடங்கப்பட்டு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.
    இந்தச் சேவையைப் பாராட்டி மத்திய அரசு, தமிழ்நாட்டுக்கு தேசிய மின் ஆளுமை திட்டத்தின் கீழ் விருது வழங்கி கெளரவித்தது.
    வேளாண்மைத்துறையில் மின்னணு தொழில்நுட்பத்தின் அடுத்தகட்டமாக வேளாண் துறை சார்ந்த செயல்பாடுகள் மற்றும் தகவல்கள் அனைத்தும் விவசாயிகளிடம் விரைவில் சென்றடைவதற்காக "உழவன்' என்ற கைபேசி செயலி தமிழ் மற்றும் ஆங்கிலம் மொழிகளில் செயல்படுத்தப்படவுள்ளது.
    இந்த செயலி மூலம் விவசாயிகளுக்கு  9 முக்கிய அடிப்படை சேவைகள் வழங்கப்படவுள்ளன.
    முதலில் கூகுள் பிளே ஸ்டோரில் உழவன் என்ற செயலியை பதிவிறக்கம் செய்து, இன்ஸ்டால் செய்த பின் அடிப்படைத் தகவல்களை உள்ளீடு செய்து பதிய வேண்டும்.
    இதில் அரசின் வேளாண் மானியத் திட்டங்கள் பற்றி அறிதல், பயனாளி திட்ட முன்பதிவு, பயிர்க் காப்பீடு விவரம் அறிதல், உரம் இருப்பு அறிதல், விதை இருப்பு விவரம் அறிதல், வேளாண் இயந்திரங்கள் வாடகை மையங்கள், விளை பொருள்களின் சந்தை விலை அறிதல், வானிலை அடிப்படையில் வேளாண் அறிவுரை பெறுதல், வேளாண் விரிவாக்கப் பணியாளர்கள் வருகை உள்ளிட்டவற்றை அறியலாம்.
    மேலும், அரசின் வேளாண் மானியத் திட்டங்களில், தேர்ந்தெடுத்த இடுபொருளின் திட்ட விவரம், மானிய விவரம் மற்றும் மானியம் பெறுவதற்கான தகுதி குறிப்பிடப்பட்டிருக்கும். பயனாளி திட்ட முன் பதிவில் வேண்டிய இடுபொருள்கள் தொடர்புடைய வகை மற்றும் வகுப்பை தேர்வு செய்து மானிய விவரங்களை அறியலாம். பதிவு செய்த விவரம் திரையில் தங்களது விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. மூதுரிமை  எண் விரைவில் தெரிவிக்கப்படும் என்று தோன்றும். பயிர்க் காப்பீடு விவரத்தில், பயிர்க் காப்பீடு கட்டணம் அறியலாம். தேர்வு செய்யப்பட்ட பயிர்க் காப்பீடு கட்டணம் மற்றும் அதற்கான கடைசி நாள் தகவல் அறியலாம். பயிர்க் காப்பீடு செய்யும் இடங்கள் மற்றும் காப்பீடு செய்வதற்கு தேவையான ஆவணங்களைத் தெரிந்து கொள்ளலாம். மேலும், விவசாயிகள் கைபேசி எண்ணை இ உள்ளீடு செய்து காப்பீடு செய்த தற்போதைய நிலையை அறிந்துகொள்ளலாம்.
    உரம் இருப்பு நிலையில், மாவட்டம் மற்றும் வட்டாரத்தை தேர்வு செய்து, விற்பனையாளர் வாரியாக முக்கிய உரங்களின் இருப்பு விவரங்களை அறிந்து கொள்ளலாம். மேலும், விற்பனையாளரைத் தொடர்பு கொள்ள "தொடர்பு கொள்' விவரம் கொடுக்கப்பட்டுள்ளது.
    விதை இருப்பு விவரம் திரையில் அரசு வேளாண்மைத் துறை, அரசு தோட்டக்கலைத் துறை மற்றும் தனியார் விவரங்கள் அறியலாம்.
    அரசு வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத் துறையில் பயிர், ரகம் மற்றும் அருகிலுள்ள வேளாண் விரிவாக்க மையத்திலுள்ள இருப்பு நிலை விவரத்தை அறியலாம். தேவைப்படின் தொடர்பு கொள்ள விவரம் கொடுக்கப்பட்டுள்ளது.
    தனியார் விதை விற்பனை நிலையங்களிலுள்ள விதை இருப்பு நிலை விவரத்தை அறிந்துகொள்ளலாம்.
    வேளாண் இயந்திரங்கள் வாடகை மையங்களில், முதன்மை இயந்திரம் அல்லது இணைப்புக் கருவி தேவைக்கேற்ப மாவட்டம், வட்டாரம் பூர்த்தி செய்து விவரம் அறியலாம். தங்கள் வட்டாரத்தில் இயந்திரம் மற்றும் கருவிகள் வாடகைக்கு தரும் நபர்களின் முகவரி மற்றும் தொலைபேசி எண் போன்ற விவரங்களை அறியலாம்.  தேவைப்படின் "தொடர்பு கொள்' விவரம் அளிக்கப்பட்டுள்ளது.
     விளை பொருள்களின் சந்தை விலை அறிதலில்,  பயிர் வாரியாக அன்றைய தேதியின் அனைத்து ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களின் விலை நிலவரத்தினை திறையில் அறியலாம்.
    வானிலை அடிப்படையில் வேளாண் அறிவுரை பெறுதலில்,  மாவட்டத்தை தேர்வு செய்து தங்கள் பகுதி வானிலையை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ள வேண்டிய பயிர் சாகுபடி அறிவுரைகளை அறிந்து கொள்ளலாம்.
    இறுதியாக வேளாண் விரிவாக்கப் பணியாளர்கள் வருகையில் மாவட்டம்,  வட்டாரம்,  பஞ்சாயத்து ஆகியவற்றை தேர்ந்தெடுத்து அதில் உதவி வேளாண்மை அலுவலரின் பெயர்,  கைபேசி எண், அலுவலரின் அடுத்த கிராம வருகை,  இடம் மற்றும் தேதியை தெரிந்து கொள்ளலாம். தேவைப்படின் அதில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணை அழுத்தி குறிப்பிட்ட அலுவலரைத் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai