வங்கிகள் சேவைக் கட்டணங்களை ரத்து செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
By DIN | Published on : 22nd April 2018 02:52 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
ஏடிஎம்களில் பணத் தட்டுப்பாடு உள்ளிட்ட காரணங்களால் மக்களுக்கு சிரமம் ஏற்படுவதால், வங்கிகள் சேவைக் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி, வங்கி வாடிக்கையாளர் கூட்டமைப்பு மற்றும் எல்ஐசி ஊழியர்- முகவர் சங்கங்கள் சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன.
திருவாரூர் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, வங்கி வாடிக்கையாளர் கூட்டமைப்பின் செயலரும், எல்ஐசி ஊழியர் சங்கத் தலைவருமான ஆர். தெட்சிணாமூர்த்தி தலைமை வகித்துப் பேசியது:
தற்போது, சில ஏடிஎம் மையங்கள் பெரும்பாலும் பணமின்றி பூட்டிக்கிடக்கின்றன. திருவாரூர் நகரைப் பொறுத்தவரை சில தனியார் வங்கி ஏடிஎம்களைத் தவிர,தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஏடிஎம்கள் சரிவர செயல்படுவதில்லை. தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் வாராக்கடனால் பணமின்றி பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், வங்கி நிர்வாகம் ஏடிஎம்களை முறைப்படுத்தாமல் பணமெடுக்க வரும் வாடிக்கையாளர்களை அலையவிடுகின்றனர். வங்கிகள் தாங்கள் வழங்கி வரும் சேவைகளுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் சேவைக் கட்டணங்களை வசூலிக்கின்றன. ஆனால் மக்கள் பயனடையும் விதத்தில் அவைகளின் செயல்பாடுகள் இல்லை.
எனவே, வங்கிகள் தங்கள் சேவைக் கட்டணங்களை ரத்து செய்ய வேண்டும். விரைவில், இந்த குறைபாடுகள் சரி செய்யப்படாவிட்டால் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்றார்.
ஆர்ப்பாட்டத்தில் அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் பைரவநாதன் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். இதில் வங்கி கூட்டமைப்புத் தலைவர் வி.கே.எஸ். அருள், நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பின் செயலர் ரமேஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.