Enable Javscript for better performance
பாமணி உர ஆலையை மூடும் முயற்சியை தமிழக அரசு கைவிட வேண்டும்: எம்எல்ஏ டி.ஆர்.பி. ராஜா- Dinamani

சுடச்சுட

  

  பாமணி உர ஆலையை மூடும் முயற்சியை தமிழக அரசு கைவிட வேண்டும்: எம்எல்ஏ டி.ஆர்.பி. ராஜா

  By DIN  |   Published on : 23rd April 2018 12:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகேயுள்ள பாமணியில் செயல்பட்டு வரும் தமிழக அரசின் பாமணி உர ஆலையை மூடும் திட்டத்தை தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும் என தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் டி.ஆர்.பி. ராஜா வலியுறுத்தியுள்ளார்.
  பாமணி உர ஆலைக்கு சனிக்கிழமை சென்று ஆய்வு செய்து அலுவலர்கள், தொழிலாளர்களின் விவரங்களைக் கேட்டறிந்த பின்னர், அவர் வெளியிட்ட அறிக்கை:
  கடந்த 1971 -ஆம் ஆண்டு மு. கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த மன்னை ப. நாராயணசாமி முயற்சியால் தொடங்கப்பட்டது பாமணி உரத் தொழிற்சாலை. பாமணி 17 : 17 : 17 என்ற தரமான உரத்தை தயாரித்து வழங்கி வருகிறது இந்த ஆலை.
  இந்த உரம் தமிழகம் மட்டுமல்லாமல், அண்டை  மாநிலங்களிலும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. யூரியா, டிஏபி, பொட்டாஷ், சிங்கிள் சூப்பர் பாஸ்பேட் என்று 4 மூலப்பொருள்களைக் கொண்டு, ஜிப்சம் மற்றும் வேப்பம் புண்ணாக்கு பொருள்களைக் கலந்து சத்தான உரத்தை பாமணி உரத் தொழிற்சாலை தயாரித்து வருகிறது.
  கடந்த 2013-14 -ஆம் ஆண்டு 15 ஆயிரம் டன் உற்பத்தி செய்து வந்த இந்த தொழிற்சாலையில், 2017-18  -ஆம் ஆண்டு தற்போது வரை 8 ஆயிரம் டன் மட்டுமே தயாரிக்கப்படுகிறது. இதில் கடந்த காலங்களில் டிசிஎம்எப் மூலம் 2  ஆயிரம் டன்  விற்பனை செய்து வந்த நிலையில், தற்போது வெறும் 375 டன் மட்டுமே இச் சங்கங்களால் கொள்முதல் செய்யப்பட்டு, விவசாயிகளுக்கு  விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
  இதற்கு முக்கிய காரணம் அலுவலர்கள், இந்த உரத்தின் பயன்பாடுகள் குறித்து விவசாயிகளுக்கு சரிவர விளம்பரப்படுத்தாததே ஆகும். பல பெரிய தனியார் உரத் தொழிற்சாலைகள், அவர்களது உரங்களுக்கு அதிகப்படியான விளம்பரம் செய்கிறார்கள். ஆனால், பாமணி உரத்துக்கு அந்த வசதி செய்துத் தரப்படவில்லை.
  கடந்த 1971 -ஆம் ஆண்டு 185  நிரந்தர ஊழியர்களும், நூற்றுக்கணக்கான தற்காலிக ஊழியர்களையும் கொண்டிருந்த இந்த தொழிற்சாலை நூற்றுக்கணக்கான குடும்பங்களுக்கு ஜீவாதாரமாக விளங்கியது. படிப்படியாக உற்பத்தியை குறைத்ததுபோல, வேலைக்கு ஆள்களை எடுப்பதையும் வெகுவாக குறைத்துவிட்டது தமிழகஅரசு.
  தற்போது, 9 நிரந்தரப் பணியாளர்கள், 24 தற்காலிக ஊழியர்கள் மட்டுமே இங்கே வேலைபார்த்து வருகிறார்கள்.
  இந்த தொழிற்சாலையை புதுப்பித்து நவீனமயமாக்கி இயற்கையான விவசாயத்துக்குத் தேவையான பல இடுபொருள்களை இங்கேயே தயாரித்தால், திறன்வாய்ந்து படித்தும் வேலையில்லாமல் தவிக்கும் ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பாகவும் இப்பகுதியில் திறமை வாய்ந்த விவசாயிகளுக்கும், மக்களுக்கும் இயற்கை விவசாயத்தை நோக்கி அவர்களின் கவனம் அதிகம் செல்ல ஊக்கமாகவும் இருக்கும் என்று சட்டப் பேரவையில் பலமுறை பேசியும், அரசின் கவனத்தை ஈர்த்தும் இந்த அரசாங்கம் செவி சாய்க்கவில்லை.
  கடந்த 2015-16 -ஆம் ஆண்டு ரூ. 40 லட்சம் செலவில் உரத்தை மூட்டையாக்க, ஒரு புதிய தானியங்கி இயந்திரம் வாங்கப்பட்டு அது பயன்படுத்தப்படாமல் உள்ளது. இந்தச் சூழ்நிலையில்தான் பாமணி உரத் தொழிற்சாலையை  மூடிவிட்டு இதேபோல் திண்டுக்கல் பகுதியில் புதிய தொழிற்சாலையை நிறுவ தமிழக அரசு திட்டமிடுவதாக செய்திகள் வருகின்றன. உரஆலையை மூடும் எண்ணத்தை  தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும். இல்லையெனில், அலுவலர்கள், தொழிலாளர்களுடன் பொதுமக்களும் இணைந்து மிகப்பெரிய போராட்டத்தில் இறங்கும் சூழ்நிலை ஏற்படும்.
  மேலும், இடிந்து விழும் நிலையிலுள்ள கட்டடங்களையும், இயந்திரங்களையும் புதுப்பிக்க ரூ. 2 கோடி அளவுக்கு நிதி தேவையென கூறப்படுகிறது. அதை உடனடியாக ஒதுக்கித் தர தமிழக அரசு முன்வர வேண்டும் என அதில் அவர் தெரிவித்துள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai