Enable Javscript for better performance
மனிதனை மனிதனாக வளரச்செய்வது கல்வி: உயர்நீதிமன்ற நீதிபதி எஸ். விமலா- Dinamani

சுடச்சுட

    

    மனிதனை மனிதனாக வளரச்செய்வது கல்வி: உயர்நீதிமன்ற நீதிபதி எஸ். விமலா

    By DIN  |   Published on : 23rd April 2018 12:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மதிப்பெண் பெறுவது மட்டுமே கல்வி அல்ல; மனிதனை மனிதனாக வளரச் செய்வதுதான் கல்வி. அத்தகைய ஒழுக்கத்துடன் கூடிய கல்வியை கல்வி நிலையங்கள் மாணவர்களுக்கு கற்றுத்தர வேண்டும் என அறிவுறுத்தினார் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ். விமலா.
     மன்னார்குடியை அடுத்த கீழத்திருப்பாலக்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆண்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு நீதியரசர் எஸ். விமலா பேசியது:
    அரசுப் பள்ளியை உயர்த்துவதற்காக ஊரே திரண்டு நின்று செயல்படுவது பாராட்டுக்குரியது. யாருக்கு என்ன நேர்ந்தாலும் எனக்கு என்ன என்ற சிந்தனையுள்ள சமுதாயத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அதுவும் குழந்தைகளின் நிலை மிகவும் மோசமாக உள்ளது. தேசிய கீதம் இசைக்கும்போது, பசி மயக்கத்தில் கீழே விழுந்தவன் மீது, தேச அவமதிப்பு வழங்கு பாயும் நிலைபோல், குழந்தைகளின் நிலை உள்ளது.
     முதலில் குழந்தைகளுக்கு என்ன தேவை என்பதை  உணர்ந்து, கல்வியை நாம் கற்றுத்தர வேண்டும். இதை அனைத்து கல்வி நிலையங்களும் உணர்ந்து கற்பிக்க வேண்டும். ஒரு குழந்தைக்கு பெற்றவள் முதல் தாய் என்றால், கல்வி கற்பிக்கும் ஆசிரியர் மற்றொரு தாய் என்பார்கள். நல்ல ஆசிரியர் கிடைத்துவிட்டால், அனைத்து குழந்தைகளும் ஹெலன் ஹில்லரைப் போல் மிக பெரிய சாதனையாளராக உயரமுடியும், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் சமீப காலங்களாக அதிகரித்துவருகின்றன. கல்விஅறிவு இருந்தால் தங்களுக்கு எதிரான குற்றங்களிலிருந்து பெண்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள முடியும்  என்றார்.
     நிகழ்ச்சிக்கு பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ப. காமாட்சி தலைமை வகித்தார். வரும் கல்வியாண்டில், இப்பள்ளியில் சேர்வதற்காக விண்ணப்பித்துள்ள மாணவ, மாணவியருக்கு மாலை அணிவித்து வரவேற்று, புதிய மாணவர் சேர்க்கையை நீதியரசர் தொடங்கி வைத்தார். மேலும் தேர்வு, விளையாட்டு, தனித்திறன் போட்டிகளில் சிறப்பிடம் பெற்றவர்களுக்குப் பரிசு, சான்றிதழ் வழங்கினார்.
     நிகழ்ச்சியில் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் ப. அறிவழகன், கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் வீ. விமலா, உதவி தொடக்கக் கல்வி அலுவலர் விக்டர் ராஜ், வட்டார வளமைய மேற்பார்வையாளர் ந. ரவிச்சந்திரன், பள்ளித் தலைமை ஆசிரியர் எஸ். சித்ரா மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai