Enable Javscript for better performance
அரசு பேருந்தை மீண்டும் இயக்க வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியல்- Dinamani

சுடச்சுட

    

    அரசு பேருந்தை மீண்டும் இயக்க வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியல்

    By DIN  |   Published on : 24th April 2018 01:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மன்னார்குடி அருகே திடீரென நிறுத்தப்பட்ட அரசு பேருந்து சேவையை மீண்டும்  தொடங்கிட வலியுறுத்தி தட்டாங்கோவிலில், பொதுமக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியிலிருந்து தட்டாங்கோவில், மேலகண்டமங்கலம், மேலமருதூர், சோத்திரியம் வழியாக வேதபுரத்துக்கு அரசு பேருந்து நீண்டகாலமாக இயக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், எவ்வித முன் அறிவிப்பும் இன்றி, கடந்த பத்து நாள்களாக பேருந்து சேவை திடீரென நிறுத்தப்பட்டது.
     இதுகுறித்து மன்னார்குடி அரசு போக்குவரத்துக் கிளை அலுவலகத்தில் கேட்டபோது, தட்டாங்கோவிலில் இருந்து வேதபுரம் செல்லும் சாலை சேதமடைந்து இருப்பதால், பேருந்து சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருப்பதாகவும், சாலை சீரமைக்கப்பட்டதும் பேருந்து சேவை தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டது. பேருந்து சேவை நிறுத்தப்பட்டதால், தட்டாங்கோவிலிருந்து வேதபுரம் வரை உள்ள 20-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர்கள், வியாபாரிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கடும் அவதிக்குள்ளாகினர். மேலும், அவர்கள் நீண்ட தூரம் நடந்து தட்டாங்கோவில் பிரதான சாலையை அடைந்து, அங்கிருந்து பேருந்தில் ஏறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்நிலையில், நிறுத்தப்பட்ட அரசு பேருந்து சேவையை மீண்டும் தொடரவும், சேதமடைந்த சாலையைப் புதுப்பிக்கவும் வலியுறுத்தி, மன்னார்குடி- திருத்துறைப்பூண்டி பிரதான சாலை, தட்டாங்கோவில் பேருந்து நிறுத்தம் அருகே பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள், மாணவர்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர். 
    தகவலறிந்து வந்த கோட்டூர் காவல்நிலைய ஆய்வாளர் ஆனந்தபத்மநாபன், அரசு பேருந்து மன்னார்குடி கிளை மேலாளர் வீரப்பன், நெடுஞ்சாலைத்துறை சாலை ஆய்வாளர் ஜெயராமன் ஆகியோர், மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது. இதனால், ஒரு மணி நேரத்துக்கும் மேல் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai