Enable Javscript for better performance
காவிரி மேலாண்மை வாரியம்:காரைக்காலில் மனிதச் சங்கிலி போராட்டம்- Dinamani

சுடச்சுட

    

    காவிரி மேலாண்மை வாரியம்:காரைக்காலில் மனிதச் சங்கிலி போராட்டம்

    By DIN  |   Published on : 24th April 2018 01:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மக்கள் போராட்டத்தைப் பார்த்து, மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முன்வரவேண்டும் என புதுச்சேரி அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன் வலியுறுத்தினார்.
    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தும் விதமாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அழைப்புவிடுத்திருந்த மனிதச் சங்கிலி போராட்டத்திற்கு, புதுச்சேரி ஆளும் காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்தது. காரைக்காலில் திமுக அமைப்பாளர் ஏ.எம்.எச்.நாஜிம் தலைமையில் பாரதியார் சாலையில் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் கலந்துகொண்ட மனிதச் சங்கிலி போராட்டம்  திங்கள்கிழமை நடைபெற்றது.
    சுமார் ஆயிரம் தொண்டர்கள் கலந்துகொண்ட மனிதச் சங்கிலியில் புதுச்சேரி வேளாண் துறை அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுடன் வந்து கலந்துகொண்டார்.
    போராட்டத்தின்போது அமைச்சர் கூறியது : கடந்த 15, 20 ஆண்டுகளாக காவிரி நீரை எதிர்பார்த்து தமிழகம், புதுச்சேரி பிரதேசத்தின் காரைக்கால் பிராந்திய விவசாயிகள் ஏமாற்றத்தையே சந்தித்துவருகின்றனர். உச்சநீதிமன்றம் காவிரி இறுதித் தீர்ப்பில், தமிழகம், புதுச்சேரி மாநிலங்களுக்குரிய காவிரி நதி நீரை வழங்கவேண்டும் என அளவீட்டை  தெரிவித்தது. அதோடு, நதி நீரை அந்தந்த மாநிலங்கள் பயன்பெறும் வகையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவேண்டும் எனவும் மத்திய அரசுக்கு அறிவுறுத்தியது.
    ஆனால் மத்திய அரசு, உச்சநீதிமன்றம் விதித்த காலக்கெடு வரை எந்த முயற்சியும் எடுக்காமல் இருந்துவிட்டது. இப்போதுகூட அதற்கான எந்த முயற்சியிலும் ஈடுபடாமல், மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு முட்டுக்கட்டை போடும் விதமாகவே நடந்துவருகிறது.
    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி திமுக சார்பில் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நடைபயணம் மேற்கொண்டார். காரைக்காலில் நடந்த நடைபயணத்தில் புதுச்சேரி முதல்வர் வி.நாராயணசாமி உள்ளிட்ட அமைச்சர்கள் கலந்துகொண்டனர். அதைத் தொடர்ந்து கோரிக்கைக்கு அழுத்தம் கொடுக்கும் விதமாக தற்போது மனிதச் சங்கிலி போராட்டம் நடத்தப்படுகிறது.
    இதுபோன்ற போராட்டங்களில் அனைத்துத் தரப்பு மக்களும் திரளாக பங்கேற்றுவருகிறார்கள். மக்கள் பங்கெடுக்கும் போராட்டங்களை பார்த்தாவது மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவேண்டும் என்றார் அமைச்சர். திமுக தலைமை செயற்குழு உறுப்பினரும் சட்டப்பேரவை உறுப்பினருமான கீதாஆனந்தன் மனிதச் சங்கிலியில் பங்கேற்றார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai