Enable Javscript for better performance
கூட்டுறவு சங்கத் தேர்தல்: கூத்தாநல்லூர் வேளாண்மை கடன் சங்க அலுவலகத்துக்குப் பூட்டு: வேட்பு மனுக்கள்- Dinamani

சுடச்சுட

    

    கூட்டுறவு சங்கத் தேர்தல்: கூத்தாநல்லூர் வேளாண்மை கடன் சங்க அலுவலகத்துக்குப் பூட்டு: வேட்பு மனுக்கள் பரிசீலனைக்கு அதிகாரிகள் வராததால் எதிர்க் கட்சியினர் ஆத்திரம்

    By DIN  |   Published on : 24th April 2018 01:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கூத்தாநல்லூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அலுவலகத்தில், தேர்தலுக்கான வேட்பு மனுக்களை பரிசீலனை செய்ய அதிகாரிகள் வராததால், சங்க அலுவலர்களை அலுவலகத்துக்குள் வைத்து பூட்டினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
    கூத்தாநல்லூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க இயக்குநர்கள் பதவிக்கான தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் கடந்த 9- ஆம் தேதி நடைபெற்றது. அப்போது எதிர்க் கட்சியைச் சேர்ந்தவர்களிடம் வேட்பு மனுக்கள் பெறப்படவில்லை என புகார் எழுந்ததால், தேர்தலை நீதிமன்றம்  நிறுத்திவைத்தது. பின்னர், மேல்முறையீட்டில் வேட்பு மனுக்கள் பரிசீலனைக்கு நீதிமன்றம்  உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து, கூத்தாநல்லூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அலுவலகத்தில் திங்கள்கிழமை மாலை வேட்பு மனுக்கள் பரிசீலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால், மாலை  3  மணி  முதல் திமுக, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், காங்கிரஸ் மற்றும் மனிதநேய  மக்கள் கட்சியைச் சேர்ந்த ஏராளமானோர் அங்கு கூடிவிட்டனர். 
    ஆனால், 4 மணி வரை வேட்பு மனு பரிசீலனைக்கு அதிகாரிகள் வரவில்லை. இதனால், ஆத்திரமடைந்த, திமுக நகரச் செயலாளர் எஸ்.எம். காதர்உசேன், மாவட்டப் பிரதிநிதி ஜெ. குமரேசன், அவைத் தலைவர் எஸ்.வி. பக்கிரிசாமி, மாவட்ட  மாணவரணி அமைப்பாளர் எஸ்.வி.பி. செந்தில்நாதன், காங்கிரஸ் நிர்வாகி கே.வி. மதியழகன், மனித நேய மக்கள் கட்சி நகரச் செயலாளர் ரஹமத்துல்லாஹ், அம்மா மக்கள் முன்னேற்றக்  கழக நகரச் செயலாளர் டீ.எம். சின்னஅமீன், நகர்மன்ற முன்னாள் தலைவர் ஜெயராஜ் உள்ளிட்டோர்,  சங்க அலுவலர்களை உள்ளே வைத்துப் பூட்டு போட்டனர். 
    பின்னர், சாலையில் நின்று தேர்தல் நடத்தும் அதிகாரிகளுக்கு எதிராக கோஷமிட்டனர். தொடர்ந்து, கூத்தாநல்லூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்து விட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் கூத்தாநல்லூர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
     இதேபோல், மூலங்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க  தேர்தலிலும், வேட்பு மனுக்களை  பரிசீலனை செய்ய அதிகாரிகள் வராததைக் கண்டித்து, திமுக கிழக்கு ஒன்றியச் செயலாளர் ஐ.வி. குமரேசன்,  ஒன்றியப் பொருளாளர் ஜெகஜீவன்ராம், ஒன்றிய துணைச்  செயலாளர்  சித்தரஞ்சன், ஒன்றிய  இளைஞரணி அமைப்பாளர் பிரகாஷ்   உள்ளிட்டோர் அலுவலகம் முன்பு கோஷமிட்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai