நெல் சாகுபடியில் சிக்கனமாக நீரைப் பயன்படுத்துவது குறித்து செயல்விளக்கம்
By DIN | Published on : 25th April 2018 08:57 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
நீடாமங்கலம் அருகேயுள்ள கீழப்பட்டு கிராமத்தில் செவ்வாய்க்கிழமை, தமிழ்நாடு நீர்வள நிலவளத் திட்டத்தின்கீழ் நெல் சாகுபடியில் சிக்கனமாக வயல் நீர் குழாய் மூலம் நீரைப் பயன்படுத்துவது குறித்து விவசாயிகளுக்கு செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.
நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய பூச்சியியல் துறை உதவிப் பேராசிரியர் ராஜா. ரமேஷ் செயல்விளக்க நிகழ்ச்சியின்போது கூறியது:
பானிபைப் அல்லது வயல் நீர் குழாய் கொண்டு நீர் மறைய நீர்க் கட்டு என்ற நவீன நீர்ப்பாசன முறையில் நீர்ப்பாசனம் செய்யும்போது நீர்த் தேவையின் அளவை குறைக்க பிலிப்பைன்ஸ் நாட்டிலுள்ள சர்வதேச நெல் ஆராய்ச்சி நிலையம் இந்த முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.
வயல் நீர்க் குழாய் தயாரிக்க 30 செ.மீ அளவுள்ள பிளாஸ்டிக் குழாய் மற்றும் அதனுடைய விட்டமானது 15 செ.மீ அளவு இருக்க வேண்டும். குழாயின் பாதியளவு, அதாவது 15 செ.மீ. அளவு வரை துளையிட வேண்டும். துளையின் விட்டமானது 0.5 செ.மீ ஆகவும், துளைகளுக்கிடையே உள்ள இடைவெளி 2 செ.மீ ஆகவும் இருக்க வேண்டும். இக்குழாயை நடவு செய்த 10-ஆம் நாளில் நில மட்டத்தின்கீழ் 15 செ.மீ இருக்குமாறு பொருத்தி குழாயின் உள்ளிருக்கும் மண்ணை எடுத்துவிட வேண்டும்.
வயலில் நீர்ப்பாசனம் செய்யும்போது குழாயிலுள்ள துளையின் வழியாக வெளியே உள்ள நீரானது குழாயின் உள்ளே சென்று குழாய்க்குள் நீர் மட்டத்தை அதிகரிக்கும். குழாயிலுள்ள நீர் மறைந்தவுடன் மீண்டும் நீர்ப் பாசனம் செய்ய வேண்டும். பூப்பதற்கு ஒரு வாரம் முன்னும், பின்னும் வயலில் நீர் இருக்குமாறு பார்த்துக் கொள்வது அவசியம். இதை களிமண் பாங்கான நிலத்திலும், நன்கு சமப்படுத்திய வயலிலும் பயன்படுத்தும்போது சிறப்பானதாக இருக்கும்.
ஒரு ஏக்கருக்கு ஒன்று என்ற அளவில் பயன்படுத்த வேண்டும். வரப்புக்கு அருகில் பொருத்துவதால் எளிதாக பார்வையிடலாம். இதைப் பயன்படுத்துவதால் நெல்லின் நீர்த் தேவை 25 சதம் வரை குறைகிறது. உற்பத்தித்திறன் 15 சதம் வரை அதிகரிக்கிறது. மின்சாரம், டீசல் தேவை குறைகிறது. நிலத்தடி நீர் விரையமாவது, புவி வெப்பமயமாவது குறைகிறது என்றார். இதில், வேளாண்மை அறிவியல் நிலைய பயிற்சி உதவியாளர்கள் தசரதன், வனிதா, திட்ட உதவியாளர்கள் சுரேஷ், சமீர்ஹீசைன் மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர்.