Enable Javscript for better performance
குறைதீர் கூட்டம்: நீர்நிலைகளை தூர்வார விவசாயிகள் வலியுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    குறைதீர் கூட்டம்: நீர்நிலைகளை தூர்வார விவசாயிகள் வலியுறுத்தல்

    By DIN  |   Published on : 27th April 2018 09:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஆறு, வாய்க்கால் உள்ளிட்ட நீர்நிலைகளை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என, குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.
    திருவாரூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ் தலைமை வகித்தார். கூட்டம் தொடங்கியதும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விவசாய சங்க பிரதிநிதிகள், சில நிமிடங்கள் முழக்கங்களை எழுப்பினர். 
    பின்னர் தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் விவசாயிகள் பேசியது:
    வி. பாலகுமாரன்: அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஞாயிற்றுக்கிழமைகளில் மருத்துவர்கள் வருவதில்லை. இதனால், சிகிச்சைப்பெற வருவோர் பாதிக்கப்படுகின்றனர். எனவே, ஞாயிற்றுக்கிழமைகளிலும் மருத்துவர்கள் வந்து சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கோடை காலத்தைப் பயன்படுத்தி ஆறுகள், வாய்க்கால்களை தூர்வாரும் வகையில் சிறப்பு நிதியை அரசிடம் பெற்று, பணிகளை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகள் கம்பி வலைகள் அமைக்க மான்யம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 
    சா.வி. ராமகிருஷ்ணன்: பண்ணைக்குட்டைகள் அதிக அளவில் திருவாரூர் மாவட்டத்துக்கு ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் போர்வெல் இல்லாத பகுதிகளுக்கு அதிக ஒதுக்கீடு செய்வதோடு அவர்கள் விரும்பும் அளவில் வெட்டிக்கொள்ளவும் அனுமதி வழங்க வேண்டும். திருவாரூர் மாவட்டத்தில் போர்வெல் இல்லாத பகுதிகளே அதிகம். இதில் 55 சதவீத பகுதிகளில் விளைச்சல் இல்லாமல் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணம் கடைமடை வரை ஆற்றுத் தண்ணீர் வராததே. எனவே, சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்து ஆறு, வாய்க்கால்களை தூர்வாரும் பணிகளை தொடங்க வேண்டும். 
    பி.எஸ். மாசிலாமணி: வறட்சி காரணமாக தென்னை மரங்கள் பாதிக்கப்பட்டுள்ளன என்றும், இதனால் தென்னை விவசாயிகளுக்கும் வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும் என நீண்ட நாள்களாக வலியுறுத்தி வருகிறோம். ஆனால், இதுவரை வழங்கப்படவில்லை. உளுந்து, பயிறு, பருத்தி உள்ளிட்டவைகளைப் பயிரிட்டோம். ஆனால், இந்த பயிர்களின் வளர்ச்சிக்கு உதவும் நுண்ணூட்டம் விவசாயிகளுக்கு வழங்கப்படவில்லை. எனவே, இவைகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    கி. வடுகநாதன்: மாங்குடி ஊராட்சியில் உள்ள பாலங்கள் பழுதடைந்த நிலையில் உள்ளன. தண்ணீர் வரும்போது இந்த பாலங்கள் பாதிப்படையும் என்பதால், சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், கமலாபுரம் வரை 5 பாலங்கள் உள்ளன. இதன் வழியாக அதிக அளவில் மக்கள் சென்று வருகின்றனர். எனவே, பாலங்களை சீரமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். 
    நெல் ஜெயராமன்: திருவாரூர் மாவட்டத்தில் வயல்கள் யாவும் வளங்கள் குறைந்த நிலங்களாக மாறிவிட்டன. இதைத் தடுக்க பசுந்தாள் உரச் செடிகளை வளர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கட்டிமேடு பாசன வாய்க்கால் ஆக்கிரமிப்புகளால் சிறிய அளவாக மாறிவிட்டது. இதை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். முள்ளியாற்றில் சிறிய அளவில் பாலம் கட்டப்பட்டுள்ளது. இதனால் மழைக் காலத்தில் பாதிப்புகள் ஏற்படும். எனவே, சரி செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு விவசாயிகள் பேசினர்.
    கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் க. சக்திமணி, வேளாண்மை இணை இயக்குநர் சங்கரன், கூட்டுறவு இணைப்பதிவாளர் காந்திநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai