Enable Javscript for better performance
நாளை அதிமுக பொதுக்கூட்டம்: முதல்வர் பங்கேற்பு- Dinamani

சுடச்சுட

    

    தமிழகத்தின் காவிரி உரிமையை நிலைநாட்டும் வகையில், திருவாரூரில் சனிக்கிழமை நடைபெறும் அதிமுக பொதுக் கூட்டத்தில் தமிழக முதல்வர் பங்கேற்க உள்ளதாக, உணவுத் துறை அமைச்சர் ஆர். காமராஜ் தெரிவித்துள்ளார்.
    இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: நீண்ட நாள்களாக நீடித்து வரும் காவிரி பிரச்னைக்கு தீர்வு காண அதிமுக தனது பங்கை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. காவிரிநீர் உரிமையை மீட்கும் வகையில் காவிரி நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என 1986-இல் அப்போதைய முதல்வராக இருந்த எம்ஜிஆர் முதன்முதலாகக் குரல் கொடுத்தார். அதன்பிறகு நடுவர்மன்ற தீர்ப்பை அரசிதழில் வெளியிட வலியுறுத்தி 1993-இல் அப்போதைய முதல்வராக இருந்த ஜெயலலிதா உண்ணாவிரதம் இருந்தார். 
    இதுபோல் 2007-இல் நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிட வேண்டும் என வலியுறுத்தி, 2-ஆவது முறையாக ஜெயலலிதா உண்ணாவிரதம் மேற்கொண்டார். 7ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை அரசிதழில் வெளியிடச் செய்தவர் ஜெயலலிதா என்பது அனைவரும் அறிந்ததே.
     இதன் தொடர்ச்சியாக, எடப்பாடி கே. பழனிசாமி தலைமையிலான அரசு, காவிரி நீர் பிரச்னையில், முழு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.  காவிரி டெல்டா பகுதியில் குறுவை சாகுபடி செய்வதற்கு  ஏதுவாக  உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைத்து, காவிரி நீரை திறந்துவிடும் தீர்ப்பை விரைந்து நிறைவேற்ற மத்தியஅரசை வலியுறுத்தி திருவாரூர் வன்மீகபுரம் அரங்கில், தமிழக முதல்வர் பங்கேற்கும் பொதுக்கூட்டம் சனிக்கிழமை நடைபெறுகிறது.  
    இந்த கூட்டத்தில் விவசாயிகளும், பொதுமக்களும், திரளாகப் பங்கேற்க வேண்டும். மேலும் திருவாரூர் வருகை தரும் முதல்வருக்கு கொரடாச்சேரி, விளமல் ஆகிய இடங்களில் அளிக்கப்பட உள்ள வரவேற்பு நிகழ்ச்சியிலும் திரளாக பங்கேற்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai