Enable Javscript for better performance
நீடாமங்கலத்தில் மேம்பாலம் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    நீடாமங்கலத்தில் மேம்பாலம் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

    By DIN  |   Published on : 27th April 2018 09:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நீடாமங்கலத்தில் மேம்பாலம் அல்லது சுரங்கப்பாதை அமைக்க மத்திய ரயில்வே அமைச்சர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மன்னார்குடி சட்டப் பேரவை உறுப்பினர் டி.ஆர்.பி. ராஜா வலியுறுத்தியுள்ளார். 
    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: மன்னார்குடி சட்டப் பேரவைத் தொகுதிகுள்பட்ட நீடாமங்கலத்தின் மிகப் பெரிய  பிரச்னையாக இருப்பது ரயில்வே மேம்பாலம். 2013- 2014 ஆம் ஆண்டு திமுகவின் முயற்சியால் அப்போதைய  ரயில்வே  நிலைக்குழுத் தலைவர் டி.ஆர். பாலு இத்திட்டத்துக்கு அனுமதியும், மத்திய  அரசிடமிருந்து  நிதியும் பெற்றுத் தந்தார். சிலநாள்களுக்குப் பிறகு அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா சட்டப் பேரவையில் இத்திட்டத்துக்கு தமிழக அரசின் ஒப்புதலையும் அளித்ததாக கூறினார். இதுவரை அத்திட்டத்துக்காக இந்த அரசு எந்தவொரு முயற்சியும் மேற்கொள்ளவில்லை.
    இதுகுறித்து சட்டப் பேரவையில் பலமுறை வலியுறுத்திய பேசியபோதும் தமிழக அரசு மெளனமாகவே இருந்தது. இந்நிலையில், 12.3.2018 அன்று நான் தில்லியில் ரயில்வே அமைச்சர் பியூஷ்கோயலை நேரில் சந்தித்து இப்பாலம் அமையாததால் ஏற்படும் இன்னல்கள் குறித்து விளக்கினேன். விளக்கத்தை கேட்ட ரயில்வே அமைச்சர் இதுகுறித்து விசாரித்து பதிலளிப்பதாக கூறினார். சில நாள்களுக்குப் பிறகு அவரிடமிருந்து எனக்கு வந்த கடிதத்தில் உள்ள விளக்கங்களை பார்க்கும்போது இந்த அதிமுக அரசு மூன்று ஆண்டுகளாக நீடாமங்கலம் மக்களை ஏமாற்றி வருவது தெரிகிறது. ஏனெனில், மேம்பால கட்டுமானப்பணி தொடங்குவதற்கு அடிப்படை  வழித்தட திட்டமிடல் மற்றும் வரைபட பணிகள் 2013-14-இல் தொடங்கப்பட்டு 2015-ஆம்  ஆண்டே முடிக்கப்பட்டு, அதே ஆண்டு பணிகள் தொடங்க அனுமதியும் , மத்திய அரசால் அளிக்கப்பட்டுள்ளது.
    ஆனால், மக்கள் பிரச்னைகளில் கவனம்  செலுத்தாமல் இருந்துவரும் தமிழக அரசு காலம் தாழ்த்தி இறுதியாக ஏற்கனவே ஒப்புக்கொண்ட வழித்தடத்தை மாற்றவேண்டும் என மத்திய அரசிடம் கோரியுள்ளது.  இதனால்,  ரயில்வே துறை தொடங்கிய பணியை நிறுத்த வேண்டியதாயிற்று என்றும், புதிய வழித்தடத்திற்கான விவரங்களை இதுவரையிலும் தமிழக அரசு மத்திய ரயில்வே துறைக்கு அனுப்பவில்லை என்றும் அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
    தவிர, தமிழக அரசு இவ்விசயத்திலும், மன்னார்குடி- பட்டுக்கோட்டை  அகல ரயில்பாதை நில எடுப்பு பணிகளிலும் மெத்தனமாக உள்ளதாக ரயில்வே அலுவலர்கள் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. எனவே, மேம்பாலம் கட்ட நில எடுப்பில் சிக்கல்கள் ஏற்பட்டால், அங்கு ஒரு சுரங்கப்பாதை அமைத்து, நீடாமங்கலம் வர்த்தகர்கள், பொதுமக்கள் பயன்பெறும் வகையில்  மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று மீண்டும் மத்திய ரயில்வே அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளேன் என்றார் அவர். 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai